

குஜராத் மாநிலத்தின், அகமதாபாத்தில் சுமார் 10 பள்ளிக்கூடங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் நகரின் 10 வெவ்வேறு பள்ளிக்கூடங்களுக்கு, இன்று (டிச. 17) மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த மின்னஞ்சலில் பள்ளிகளில் பொருத்தப்பட்டுள்ள வெடிகுண்டுகள் மதியம் 1.11 மணிக்கு வெடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகளில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு, மதிய வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர், தகவலறிந்து காவல் துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக அங்கு விரைந்தனர்.
இந்த நிலையில், மோப்ப நாய்களின் உதவியுடன் பள்ளிகளின் கட்டடங்கள் முழுவதும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சோதனைகளின் முடிவில், 10 பள்ளிகளின் கட்டடங்களில் இருந்து சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காததால் இந்த மிரட்டல்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டன.
இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபரைப் பிடிக்கும் முயற்சியில் சைபர் கிரைம் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்கள், அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்ற கட்டமைப்புகளுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல்கள் மூலம் போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜெர்மனியில் கார் ஆலையை பார்வையிட்ட ராகுல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.