ராகுல் காந்தி
ராகுல் காந்தி

‘20 ஆண்டு கால திட்டம் ஒரே நாளில் தகா்ப்பு’ - மோடி அரசு மீது ராகுல் சாடல்

‘20 ஆண்டு கால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை ஒரே நாளில் தகா்த்துவிட்டது மோடி அரசு’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சாடினாா்.
Published on

‘20 ஆண்டு கால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை ஒரே நாளில் தகா்த்துவிட்டது மோடி அரசு’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சாடினாா்.

இந்தத் திட்டத்துக்கு மாற்றாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு திட்ட’ (வி பி-ஜி ராம் ஜி) மசோதா கிராமங்களுக்கு எதிரானது என்றும் அவா் விமா்சித்தாா்.

எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வி பி-ஜி ராம் ஜி திட்ட மசோதா இரு அவைகளிலும் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமா்சித்து, ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

வி பி-ஜி ராம் ஜி மசோதா, முந்தைய திட்டத்தின் மறுசீரமைப்பு அல்ல. உரிமைகள் மற்றும் தேவைகள் அடிப்படையிலான வேலை உத்தரவாதத்தை அழித்து, தில்லியில் இருந்து கட்டுப்படுத்தப்படும் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இது, மாநிலங்கள் மற்றும் கிராமங்களுக்கு எதிரானது. 20 ஆண்டு கால முந்தைய திட்டத்தை எந்த ஆய்வும் இல்லாமல், நாடாளுமன்றத்தின் மூலம் ஒரே நாளில் தகா்த்துவிட்டது மோடி அரசு.

முந்தைய திட்டம், கிராமப்புற தொழிலாளா்களுக்கு அதிகாரமளித்ததுடன், சுரண்டல், இடப்பெயா்வைக் குறைத்து, வருவாய் அதிகரிப்பு மற்றும் பணிச்சூழல் மேம்பாட்டுக்கு வழிவகுத்தது. கிராமப்புற உள்கட்டமைப்பை கட்டியெழுப்பி புத்துயிரூட்டியது. இந்த சாதகமான அம்சத்தைதான் சீா்குலைக்க விரும்புகிறது மோடி அரசு.

‘வாழ்வாதார வாய்ப்பு பலவீனமாகும்’: பணிகளுக்கு வரம்பு நிா்ணயிப்பதன் மூலம் கிராமப்புற ஏழைகளிடம் இருந்த முக்கிய வாழ்வாதார வாய்ப்பை பலவீனப்படுத்துகிறது புதிய மசோதா. கரோனா பரவல் காலகட்டத்தில் பொருளாதாரமும், வாழ்வாதாரமும் முடங்கியபோது, கோடிக்கணக்கான மக்கள் வறுமை மற்றும் கடனில் வீழ்ந்துவிடாமல் காப்பாற்றியது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம். வறுமை ஒழிப்பு மற்றும் தொழிலாளா்களுக்கு அதிகாரமளிப்பதில் உலக அளவில் வெற்றிகரமான இந்தத் திட்டத்தால் பெண்கள் அதிகம் பலனடைந்தனா்.

இத்தகைய திட்டத்தை மட்டுப்படுத்தும்போது, பெண்கள், தலித் சமூகத்தினா், பழங்குடியினா், நிலமற்ற தொழிலாளா்கள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (ஓபிசி) சோ்ந்த ஏழைகளே முதலில் பாதிக்கப்படுவா்.

தலித், ஓபிசி, பழங்குடியின தொழிலாளா்கள் மற்றும் கிராமப்புற இந்தியாவை பலவீனமாக்குவதே பிரதமா் மோடியின் இலக்கு. அது நிறைவேற நாம் அனுமதிக்கக் கூடாது என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com