கர்நாடக பேரவையில் விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம்

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்பப் பெற்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை தீர்மானம் தாக்கல் செய்தார்.
கர்நாடக பேரவையில் விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம்
Updated on
2 min read

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்பப் பெற்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை தீர்மானம் தாக்கல் செய்தார்.

அந்த தீர்மானத்தில், "விபி ஜி ராம் ஜி சட்டம் தன்னிச்சையாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம், ஊரக மக்களின் வாழ்வாதார உரிமை மற்றும் கூட்டாட்சி அடித்தளத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கர்நாடகத்தில் ஊரக மக்களின் வாழ்வாதார உரிமையை பாதுகாக்கும் நோக்கில், கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான, மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தக்கூடிய, அதிகாரப் பரவலாக்கலுக்கு எதிரான கிராம பஞ்சாயத்துகளின் அதிகாரத்தை பறிக்கும். எனவே, அந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் கொண்டுவருமாறு மத்திய அரசை இந்த அவை கேட்டுக்கொள்கிறது. இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் அதிகாரப் பரவலாக்கல் மற்றும் பஞ்சாயத்து ராஜ் கட்டமைப்பில் முழு நம்பிக்கையை இந்த அவை வெளிப்படுத்துகிறது.

ஏழைகளின் சஞ்சீவினியாகவும், ஊரக வாழ்க்கையின் அங்கமாகவும் விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் கொண்டுவர இந்த அவை மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நீக்கிவிட்டு, மத்திய அரசு கொண்டுவந்துள்ள விபி ஜி ராம் ஜி சட்டத்துக்கு அவை கடும் ஆட்சேபம் தெரிவிக்கிறது" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக், "விபி ஜி ராம் ஜி சட்டத்தை இந்த அவை எதிர்க்கிறது என்று கூறாமல், காங்கிரஸ் அரசு எதிர்க்கிறது என்று கூறுங்கள். இந்த தீர்மானத்தில் எங்களையும் சேர்க்காதீர்கள்" என்று தெரிவித்தார்.

இதை பொருட்படுத்தாத முதல்வர் சித்தராமையா, மீண்டும் மீண்டும் இந்த அவை என்றே குறிப்பிட்டார். மேலும், இந்த அவை என்பதை விவாதத்தின்போது பதிவு செய்யுமாறு பாஜக எம்எல்ஏக்களை முதல்வர் சித்தராமையா கேட்டுக்கொண்டார். இதற்கு செவிகொடுக்காத பாஜக எம்எல்ஏக்கள், முதல்வர் சித்தராமையா தீர்மானத்தை வாசிக்கும்போது காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த முதல்வர் சித்தராமையா, பாஜக எம்எல்ஏக்களின் முழக்கத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதனிடையே முதல்வர் சித்தராமையா தீர்மானத்தை வாசித்தப்படி இருந்தார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

இதை தொடர்ந்து அவையை மதிய உணவுக்கு பேரவைத் தலைவர் யூ.டி.காதர் ஒத்திவைத்தார். இதைத் தொடர்ந்து அவை மீண்டும் கூடியதும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டது.

விவாதத்தின் நிறைவாக தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் விடாததால் அவை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜக, மஜத உறுப்பினர்கள் அவையில் இரவு முழுவதும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com