விபி - ஜி ராம் ஜி மசோதா: நாடாளுமன்றத்தில் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ (விபி - ஜி ராம் ஜி) சட்ட மசோதாவை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா போராட்டம் நடத்தினர்.
மக்களவையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ சட்ட மசோதா மூன்று நாள்கள் விவாதத்துக்குப் பிறகு நேற்று காலை நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் விபி - ஜி ராம் ஜி சட்ட மசோதா நேற்று காலை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நள்ளிரவு 12 வரை விவாதம் செய்யப்பட்டு, பின்னர் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விபி - ஜி ராம் ஜி சட்ட மசோதா அனுப்பப்பட்டு விரைவில் சட்டமாகவுள்ளது.
விவாதத்தின் போது, இரு அவைகளிலும் காந்தியின் பெயர் நீக்கம், மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி அளிக்க வேண்டும் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வாதத்தை நேற்று பதிவு செய்தனர்.
இந்த நிலையில், புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காந்தியின் பெயர் மாற்றத்துக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, வில்சன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.