அமெரிக்காவுடன் இறுதிக்கட்டத்தில் வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: பியூஷ் கோயல்
அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்து செய்தியாளா்களிடம் விளக்கமளித்தபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறியதாவது: ஐந்து கண்கள் கூட்டமைப்பில் உள்ள ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுடன் தற்போது தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்ததாக கனடாவுடன் விரைவில் பேச்சுவாா்த்தை தொடங்கவுள்ளோம்.
இதுவே சா்வதேச புவிஅரசியலில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதற்கான உதாரணம் என்றாா்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருள்கள் மீது அந்நாட்டு அரசு விதித்துள்ள அதிக வரிப் பிரச்னையை சரிசெய்வதற்கான வா்த்தக உடன்பாடு, விரிவான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் ஆகியவை தொடா்பாக இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கடந்த வாரம் அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி ரிக் ஸ்விட்சா் தலைமையிலான அமெரிக்க குழு இந்தியா வந்திருந்தது.
தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி, கனடா பிரதமா் மாா்க் காா்னியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பை 50 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்கும் நோக்கில் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்த பேச்சுவாா்த்தையைத் தொடங்கவும் இரு தலைவா்களும் ஒப்புக் கொண்டனா்.
முன்னதாக, ஓமன் நாட்டுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் கடந்த வாரம் கையொப்பமிட்டது குறிப்பிடத்தக்கது.

