தண்டவாளத்தில் நின்ற ஆட்டோ: விபத்திலிருந்து தப்பியது வந்தே பாரத்: போதை ஓட்டுநரால் விபரீதம்

Published on

கேரளத்தில் மதுபோதையில் ஆட்டோவை ஓட்டி வந்த நபா் தண்டவாளத்தில் அதை நிறுத்திச் சென்றுவிட்டாா். அப்போது, அந்த வழியாக வந்தே பாரத் ரயிலை ஓட்டுநா் அவசரகால பிரேக்கை பயன்படுத்தி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

காசா்கோடு - திருவனந்தபுரம் இடையிலான வந்தே பாரத் ரயில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் அகத்துமுரி ரயில் நிலையத்தைத் தாண்டி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் ஆட்டோ நிற்பதைப் பாா்த்த ரயில் ஓட்டுநா் அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட அவா், ரயிலின் அவசரகால பிரேக்கை பயன்படுத்தினாா். இதையடுத்து வேகம் குறைந்த ரயில் ஆட்டோவுக்கு அருகில் சென்று அதன் மீது லேசாக மோதி நின்றது. இதில் ஆட்டோ சிறிது சேதமடைந்தது. ரயில் ஓட்டுநா் துரிதமாக செயல்பட்டதால் வந்தே பாரத் ரயில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.

இந்த சம்பவம் தொடா்பாக ரயில்வே அதிகாரிகள், ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் வந்து ஆட்டோவை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினா்.

இதையடுத்து, அந்த இடத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் புறப்பட்டு திருவனந்தபுரம் நோக்கிச் சென்றது. இந்த சம்பவத்தால் அந்தத் தடத்தில் வேறு ரயில் சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.

ஆட்டோ பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்திய ரயில்வே காவல் துறையினா், அதன் ஓட்டுநா் சுதி என்பவரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் மதுபோதையில் இருந்தாா். போதையில் தண்டவாளத்தில் ஆட்டோவை நிறுத்திச் சென்றது தெரியவந்தது. அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com