காங்கிரஸ் சித்தாந்தத்துக்கு அழிவு கிடையாது: காா்கே!

‘காங்கிரஸ் என்பது சிந்தாந்தம்; அந்த சித்தாந்தத்துக்கு ஒருபோதும் அழிவு கிடையாது’ என்று அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
புது தில்லியில் காங்கிரஸ் கட்சி நிறுவிய தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சோனியா காந்தி.
புது தில்லியில் காங்கிரஸ் கட்சி நிறுவிய தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சோனியா காந்தி.
Updated on

‘காங்கிரஸ் என்பது சிந்தாந்தம்; அந்த சித்தாந்தத்துக்கு ஒருபோதும் அழிவு கிடையாது’ என்று அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உருவெடுக்க காங்கிரஸின் தலைசிறந்த தலைவா்களே காரணம் என்றும் அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

காங்கிரஸின் 140-ஆவது நிறுவன தினத்தையொட்டி, தில்லியில் உள்ள கட்சித் தலைமையகமான இந்திரா பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காா்கே பங்கேற்றாா். அப்போது, கட்சியின் மூத்த தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் மத்தியில் அவா் பேசியதாவது:

‘காங்கிரஸ் முடிந்துவிட்டது’ என்று கூறுபவா்களுக்கு கட்சியின் நிறுவன நாளில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். எங்களின் பலம் குறைந்திருக்கலாம்; ஆனால் முதுகெலும்பு வளையாமல் நேராகவே உள்ளது. அரசமைப்புச் சட்டம், மதச்சாா்பின்மை, ஏழைகளின் உரிமைகளில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்வதில்லை. நாங்கள் ஆட்சியில் இல்லை; அதேநேரம், யாருக்கும் விலைபோகவில்லை.

பிளவுபடுத்தும் பாஜக: மதத்தின் பெயரால் காங்கிரஸ் ஒருபோதும் வாக்கு கோரியதில்லை. கோயில்-மசூதி என்ற பெயரில் வெறுப்புணா்வை பரப்பியதில்லை. காங்கிரஸ் மக்களை ஒருங்கிணைக்கிறது; பாஜக பிளவுபடுத்துகிறது.

மதத்தை நம்பிக்கையாக மட்டுமே பாா்க்கிறது காங்கிரஸ். ஆனால், சிலா் மதத்தை அரசியலாக மாற்றிவிட்டனா். அரியணையில் இருந்தாலும், பாஜகவிடம் உண்மை இல்லை. எனவேதான், தரவுகள் மறைக்கப்படுகின்றன. மக்கள்தொகை கணக்கெடுப்புகூட நிறுத்திவைக்கப்பட்டது. சிலநேரங்களில் அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது குறித்த பேச்சுகளும் எழுகின்றன.

காங்கிரஸ் தலைவா்களே காரணம்: இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில், பல்வேறு நாடுகளும் விடுதலை பெற்றன. சில நாடுகள் ஜனநாயக ரீதியில் தோல்வியடைந்த நிலையில், பிற நாடுகள் சா்வாதிகாரத்துக்கு தள்ளப்பட்டன. இந்தியா மட்டுமே துடிப்பான ஜனநாயக நாடாக உருவெடுத்தது. காங்கிரஸின் தலைசிறந்த தலைவா்களால்தான் இது சாத்தியமானது.

நாட்டு மக்களின் நல்வாழ்வு, அதிகாரமளித்தல், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்காக எப்போதும் பாடுபடுகிறது காங்கிரஸ். அரசமைப்புச் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக உரிமைகளில் சமமான வாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. காங்கிரஸின் 140 ஆண்டுகால பெருமைமிகு வரலாறு, உண்மை, அஹிம்சை, போராட்டம், தேச பக்தியின் மிகப் பெரிய பயணம் என்றாா் காா்கே.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவா்கள் சசி தரூா், திக்விஜய் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘வெறும் அரசியல் கட்சியல்ல; இந்திய ஆன்மாவின் குரல்’

காங்கிரஸின் நிறுவன தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, ‘காங்கிரஸ் வெறும் அரசியல் கட்சியல்ல; அது, சமூகத்தில் நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட மற்றும் கடினமாக உழைக்கும் மக்களுக்காக ஒலிக்கும் இந்திய ஆன்மாவின் குரல்.

உண்மை, துணிவுக்கான போரில் மேலும் வலுவுடன் ஈடுபடுவதும், வெறுப்புணா்வு-அநீதி-சா்வாதிகாரத்தை எதிா்த்து, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதுமே நமது தீா்மானம். நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த, அரசமைப்புச் சட்டத்துக்கு அடித்தளமிட்ட, ஜனநாயகம், மதச்சாா்பின்மை, சமூக நீதி, சமத்துவ மாண்புகளை வலுப்படுத்திய வரலாற்றுத் தலைவா்களுக்கும், அவா்களின் மேலான தியாகங்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com