

ஜார்க்கண்டில், பறிமுதல் செய்யப்பட்ட 200 கிலோ கஞ்சாவை எலிகள் அழித்துவிட்டன என ராஞ்சி நீதிமன்றத்தில் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்டில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஓர்மஞ்சி காவல் துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையின்போது, கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், பிகாரைச் சேர்ந்த இந்திரஜித் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையின்போது 200 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட நேரம், இடம் மற்றும் முறைகள் குறித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் முரண்டுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில், அதிர்ச்சியளிக்கும் விதமாக, குற்றவாளியை யார் கைது செய்தார்கள், வாகனம் எந்த இடத்தில் சோதனைச் செய்யப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் விளக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதையடுத்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் முழுவதும் ஓர்மஞ்சி காவல் நிலையத்தின் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 200 கிலோ கஞ்சாவை எலிகள் அழித்துவிட்டன என காவல் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில், ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படாதது மற்றும் விசாரணையில் ஏற்பட்டுள்ள குளறுபடி ஆகியவற்றால் இந்திரஜித் ராயின் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி இந்த வழக்கில் இருந்து நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.
இத்துடன், பறிமுதல் செய்யப்பட்டு அரசு கிடங்குகளில் சேமிக்கப்படும் விலை மதிப்புமிக்க போதைப் பொருள்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த வழக்கில், எலிகள் அழித்ததாகக் கூறப்படும் 200 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜார்க்கண்டின் தன்பாத் நகரில், கடந்த ஜூலை மாதம் அரசு கிடங்கில் பாதுகாப்பட்ட மதுபானங்களை எலிகள் குடித்து விட்டதாக அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.