
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12, 13 ஆம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவிருப்பதாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஷ்ரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விக்ரம் மிஷ்ரி கூறுகையில், “பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக வருகிற 12, 13 ஆம் தேதிகளில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றப் பின் மோடியின் முதல் அமெரிக்கப் பயணம் இதுவாகும். டிரம்ப் பதவியேற்றப் பின்னர் அமெரிக்கா செல்லும் மிக முக்கியத் தலைவர்களுள் மோடியும் ஒருவர்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி பிரதமர் மோடி குடியேற்றம், அமெரிக்க உற்பத்தி பொருள்கள், இருதரப்பு உறவுகள் குறித்து டிரம்புடன் தொலைபேசியில் உரையாடினார்.
அமெரிக்காவின் நவீன திட்டங்களில் கூட்டாளியாகக் கருதப்படும் இந்தியா, இருநாட்டு வர்த்தகத்தை எளிதாக்கவும், விசா நடைமுறையை எளிமைப்படுத்தவும் இந்தியா ஆர்வமாக இருக்கிறது. மேலும், சொகுசு கார்கள், மின்கலன்கள், ரசாயனப் பொருள்கள் மீதான இறக்குமதி வரி குறித்து மறுபரிசீலனை செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா - இந்தியா இடையேயான இருநாட்டு வர்த்தகம் 2023-24 ஆம் ஆண்டில் 118 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.