கணவனுடன் சண்டை: வட்டி வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியருடன் சென்ற மனைவி!

கணவனைப் பிடிக்காததால் வட்டி வசூலிக்க வந்த ஊழியருடன் மனைவி திருமணம்!
கணவனுடன் சண்டை: வட்டி வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியருடன் சென்ற மனைவி!
Published on
Updated on
1 min read

கணவனுடன் சேர்ந்து வாழ்வதற்கு அவரது மனைவிக்கு பிடிக்காததால், தமது வீட்டுக்கு வட்டி வசூலிக்க வரும் நிதி நிறுவன ஊழியரை அந்த பெண்மணி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பிகாரில் அரங்கேறியுள்ளது.

பிகார் மாநிலம் பாட்னாவில் வாழ்ந்து வந்தவர் இந்திர குமாரி. இந்திர குமாரிக்கும் நகுல் ஷர்மா என்பவருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், இந்திர குமாரியின் கணவர் நகுல் மது பழக்கத்துக்கு அடிமையாகியிருந்ததால் தினமும் குடித்துவிட்டு அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில், கணவனால் உடலளவிலும் மனதளவிலும் பெரும் துயரங்களை அனுபவிக்க தொடங்கிய இந்திர குமாரிக்கு, அவர்கள் வீட்டுக்கு வட்டி வசூலிக்க வரும் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நிதி நிறுவன ஊழியரான பவன்குமார் யாதவ், வட்டி தொகை வசூலிப்பதற்காக அவ்வப்போது இந்திர குமாரியிடம் வீட்டுக்கு வந்து சென்ற நிலையில், இவர்கள் இருவருக்குமிடையே நட்பு வளர்ந்தது, இந்த உறவு நாளடைவில் காதலாகவும் மலர்ந்தது.

தனது கணவனால் ஏற்படும் கொடுமைகளை இனிமேலும் சகித்துக்கொள்ள முடியாதென முடிவெடுத்த இந்திர குமாரி, பவன்குமாரிடம் தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, அவர்கள் இருவரும் தனியாகச் சென்று குடும்பம் நடத்துவதென்ற துணிச்சலான முடிவுக்கு வந்துள்ளனர்.

அதன்படி, அவர்கள் இருவரும் பாட்னாவிலிருந்து கடந்த 4-ஆம் தேதி புறப்பட்டு இந்திர குமாரியின் உறவினரின் வீடு அமைந்துள்ள மேற்கு வங்கத்தின் ஆசான்சோலுக்கு விமானம் மூலம் சென்றுள்ளனர். பவன்குமாரின் உறவினர்கள் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் பிப். 11-ஆம் தேதி திருமணமும் செய்து கொண்டனர்.

இந்த திருமண விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், இந்திர குமாரியின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவர்கள் பவன்குமார் மீது காவல்துறையில் புகாரளித்தனர். அதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், தன் சொந்த விருப்பத்தின்பேரில் பவன்குமாரை திருமணம் செய்து கொண்டதாக இந்திர குமாரி தெரிவித்துள்ளார்.

பவன்குமாருக்கு இந்திர குமாரியின் உறவினர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் நிலையில், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென இந்த புதுமணத் தம்பதியினர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

கணவரிடமிருந்து விவாகரத்து பெறாமலேயே இன்னொரு நபரை மனைவி திருமணம் செய்திருப்பதால் இவ்விவகாரத்தில் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாமல் காவல் துறையும் குழம்பிப் போயுள்ளது. எனினும், புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com