
தில்லியில் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் மக்கள் பதற்றத்தை தவிர்க்க பிரதமர் மோடி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "தில்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தில்லி முன்னாள் முதல்வர் அதிஷியின் பதிவை மறுபகிர்வு செய்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால், "அனைவரின் பாதுகாப்பிற்காக நான் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகினி நாயக் எக்ஸ் தளத்தில், "தில்லியில் 10 நிமிடங்களுக்கு முன்பு நிலநடுக்கம் உணரப்பட்டது, எங்களை தூக்கத்தில் இருந்து எழுப்பியது. அனைவரும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். மேலும் பிரார்த்தனை செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தில்லி-என்சிஆர் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் சேதம் அல்லது காயம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை. இந்த நிலநடுக்கம், புது தில்லியை மையமாகக் கொண்டு, காலை 5:36 மணிக்கு ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்புக் கல்விக் கல்லூரிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தாக அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார். நிலநடுக்கம் ஏற்பட்டபோது பலத்த சத்தமும் கேட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
அருகில் ஏரியைக் கொண்ட அந்தப் பகுதி, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறிய, குறைந்த அளவிலான நிலநடுக்கங்களை அனுபவித்து வருகிறது.
முன்னதாக இங்கு 2015-இல் ரிக்டர் அளவில் 3.3ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது என்றார். நிலநடுக்கத்தால் தில்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் உயரமான கட்டடங்களில் வசிப்பவர்கள் அவசரமாக வெளியேறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.