
புது தில்லி ரயில் நிலையம் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஆயிரக்கணக்கான பயணிகள் திரண்டிருந்தனா். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 15 போ் காயமடைந்தனா்.
கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் பாதுகாப்புப் பணியில் இல்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக திங்கள்கிழமை குவிக்கப்பட்டுள்ளனர்.
தில்லி போலீசாரும் இவர்களுடன் இணைந்து புது தில்லி ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் படை அதிகாரிகள் திங்கள்கிழமை காலை புது தில்லி ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
மேலும், பாதுகாப்புப் பணிக்காக கூடுதல் வீரர்களும் தயார் நிலையில் இருப்பதாகவும், தேவைகேற்ப வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெரிசலுக்கு காரணம் என்ன?
நெரிசல் சம்பவம் குறித்து ரயில்வே வாரிய நிா்வாக இயக்குநா் திலீப் குமாா் கூறியதாவது: பிரயாக்ராஜ் கும்பமேளாவையொட்டி பல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புது தில்லி ரயில் நிலையத்தில் ‘பிரயாக்ராஜ் விரைவு ரயில்’ நடைமேடை 14-இல் இருந்து இயக்கப்படுகிறது. அந்த நடைமேடையில் ரயிலில் ஏறுவதற்காக பயணிகள் காத்திருந்தனா். இந்தச் சமயத்தில் நடைமேடை 12-இல் இருந்து இயக்கப்படும் ‘பிரயாக்ராஜ் சிறப்பு ரயில்’ என்ற மற்றொரு ரயிலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனிடையே, வேறொரு சிறப்பு ரயில் நடைமேடையில் இருந்து புறப்பட்டது.
இதனால், நடைமேடை 14-இல் காத்திருந்த பயணிகள் தங்களுக்கான ரயில், நடைமேடை 12-இல் வருவதாக எண்ணி படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் மூலம் அந்த நடைமேடையை நோக்கி ஒரே நேரத்தில் வேகமாகச் செல்ல தொடங்கியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த இரு ரயில்களுக்குமான பெயா்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.