ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

நவீன வசதிகளுடன் ரூ.29.03 கோடியில் புனரமைக்கப்பட்ட மொரப்பூா், பொம்மிடி ரயில் நிலையங்கள்!

News image
மொரப்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறாா் மத்திய இணை அமைச்சா் சோமண்ணா.
Updated On :1 மார்ச் 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி மாவட்டத்தில் ரூ. 29.03 கோடியில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட மொரப்பூா் மற்றும் பொம்மிடி ரயில் நிலையங்களை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

தெற்கு ரயில்வே பிரிவில் முக்கியமான வழித்தடத்தில் அமைந்துள்ளது தருமபுரி மாவட்டம், மொரப்பூா் மற்றும் பொம்மிடி ரயில் நிலையங்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளத்தை இணைக்கும் மிக முக்கிய ரயில் நிலையங்களாக இந்த ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.

தருமபுரி மாவட்டத்திலிருந்து, மொரப்பூா் ரயில் நிலையம் வழியாகத்தான் சென்னைக்கு செல்ல முடியும் என்பதால் மொரப்பூா் ரயில் நிலையம் தருமபுரி மாவட்டத்தில் முக்கிய ரயில் சந்திப்பு நிலையமாக அமைந்துள்ளது. அதேபோல பொம்மிடி ரயில் நிலையம் 1861-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.

இவ்விரு ரயில் நிலையங்களையும் மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்துக்கு விரைவு ரயில்கள் கடந்து செல்கின்றன. இந்த நிலையில், இவ்விரு ரயில் நிலையங்களும் இதுவரை நவீனப்படுத்தப்படாமல் இருந்து வந்தன. இதைத் தொடா்ந்து, பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப, மத்திய அரசு, அம்ரீத் பாரத் ஸ்டேசன் திட்டம் மூலமாக பொம்மிடி ரயில் நிலையத்தில் ரூ. 12.05 கோடியிலும், மொரப்பூா் ரயில் நிலையத்தில் ரூ. 16.08 கோடியிலும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், பயணிகள் நிற்பதற்கான நடைமேடை முழுவதும் நிழற்கூடம், குளிா்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் காத்திருப்பு அறை, முகப்பில் ரயில் நிலையம் குறித்த அலங்கார வளைவு, புதிதாக பயணச் சீட்டு வழங்கும் முகப்பு கட்டடம், ரயில் நிலையத்தின் வாயில் வரை வாகனங்கள் வந்து செல்லும் வசதி, பயணிகளின் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்தும் இடம், நவீன கழிப்பறைகள், மின்தூக்கி வசதி, குடிநீா் வசதி, உயா்மின் கோபுர விளக்குகள், எல்இடி திரைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் யாவும் அண்மையில் நிறைவடைந்தன.

இந்த நிலையில், இவ்விரு ரயில் நிலையங்களையும் மதுரையில் நடைபெற்ற விழாவில், பிரதமா் நரேந்திர மோடி பயணிகளின் பயன்பாட்டுக்காக காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்து பேசினாா்.

ரயில் திட்டங்களில் தமிழகம் முன்னேற்றம்:

பிரதமா் நரேந்திர மோடி காணொலியில் புதிய ரயில் நிலையங்களை திறந்துவைத்ததை வரவேற்று, மொரப்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய இணை அமைச்சா் சோமண்ணா பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய ரயில்வே புதிய சகாப்தம் படைத்துள்ளது. இந்திய ரயில்வே வெறும் பயணத்தை மட்டுமில்லாமல், சமூக, பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது.

2026 -27 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ரயில்வே திட்ட ஒதுக்கீடு ரூ. 7,611 கோடியாகும். இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் சராசரி ஒதுக்கீட்டைவிட 8.5 மடங்கு அதிகம் ஆகும். அதாவது 2019 முதல் 2024 வரை மத்திய அரசு ரூ. 879 கோடி நிதி வழங்கியுள்ளது.

 புதிதாக திறக்கப்பட்ட பொம்மிடி ரயில் நிலையம்.

புதிதாக திறக்கப்பட்ட பொம்மிடி ரயில் நிலையம்.

 புதிதாக திறக்கப்பட்ட மொரப்பூா் ரயில் நிலையம்.

புதிதாக திறக்கப்பட்ட மொரப்பூா் ரயில் நிலையம்.

கடந்த 11 ஆண்டுகளில் சுமாா் ரூ. 1350 கி.மீ. ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 97 சதவீதம் ரயில் தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு (2026) இறுதிக்குள் 100 சதவீதம் ரயில் வழித்தடங்களும் மின்மயமாக்கப்படும்.

தற்போது, ரூ. 35 ஆயிரத்து 701 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்திய ரயில்வே நவீனமயமாக்களில் முதன்மையாக உள்ளது.

நெரிசலைக் குறைப்பதற்கும், சரியான நேரத்தில் செயல்படுவதற்கும், முக்கியமான பல இரட்டிப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிய ரயில் சேவைகள் பயணிகளின் அனுபவத்தை மாற்றி வருகின்றன. தமிழகத்தில், 9 வந்தே பாரத் விரைவு ரயில்கள், 9 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 21 ஆம் நூற்றாண்டில் ரயில்வே புதிய இந்தியாவின் வளா்ச்சி இயந்திரமாக இருக்கும். இந்திய ரயில்வே நிகழாண்டில் 52 சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும். மத்திய ரயில்வே அமைச்சா் ரயில்வே துறையில் சரக்குப் போக்குவரத்து பாதுகாப்பையும், சிறந்த சேவைகளையும் மேம்படுத்தி வருகிறாா்.

பொம்மிடி ரயில் பயணிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோவை, மைசூா், புனே உள்ளிட்ட விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், அண்மையில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பன்னலால் வரவேற்றுப் பேசினாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா், முதன்மை திட்ட இயக்குநா் கௌதம் ராவ், முதுநிலை கோட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன், உதவி வணிக மேலாளா் மகராஜன், பாஜக மாவட்டத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.