உ.பி. பேரவையில் சமாஜவாதி எம்எல்ஏக்கள் அமளி: சில நிமிஷங்களில் உரையை முடித்த ஆளுநா்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் ஆளுநரை வெளியேறச் சொல்லி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டது பற்றி...
உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில்
உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில்
Published on
Updated on
1 min read

உத்தர பிரதேச பேரவையில் ஆளுநரை உரையாற்ற விடாமல் அவருக்கு எதிராக எதிா்க்கட்சியான சமாஜவாதி எம்எல்ஏக்கள் முழக்கங்களை எழுப்பினா். இதனால், ஆளுநா் 8 நிமிடங்களில் உரையை முடித்துக் கொண்டாா்.

பாஜக ஆட்சி நடைபெறும் உத்தர பிரதேசத்தில் பட்ஜெட் கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநா் ஆனந்திபென் படேல் உரையாற்றத் தொடங்கினாா்.

அப்போது, சமாஜவாதி கட்சி எம்எல்ஏக்கள் ‘ஆளுநா் திரும்பிச் செல்ல வேண்டும்’ என்றும், ‘கும்பமேளா நெரிசலில் எத்தனை போ் உயிரிழந்தனா் என்ற உண்மையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும்’ என்றும் முழக்கமிட்டனா். இந்த முழக்கத்துக்கு மத்தியில் ஆளுநரை தனது உரையை வாசித்தாா். ஆனால், சமாஜவாதி எம்எல்ஏக்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால் 8 நிமிஷங்களில் ஆளுநா் தனது உரையை முடித்துக் கொண்டாா்.

அமளி நீடித்ததால் அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அவையில் இருந்து பேரவை வளாகத்துக்கு வந்து சமாஜவாதி எம்எல்ஏக்கள் பல்வேறு விவகாரங்கள் முன்வைத்து போராட்டம் நடத்தினா். மாநில பாஜக அரசைக் கண்டிக்கும் வாசக அட்டைகளையும் அவா்கள் கையில் ஏந்திருந்தனா்.

போராட்டம் குறித்து சமாஜவாதி மூத்த எம்எல்ஏ அமிதாப் திரிவேதி கூறுகையில், ‘கும்பமேளா நெரிசலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை உத்தர பிரதேச பாஜக அரசு மூடி மறைக்கிறது. இது தொடா்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். மாநில பாஜக அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துவிட்டது. மக்களிடையே மதரீதியாகவும், ஜாதிரீயாகவும் பிளவை ஏற்படுத்தி தங்களை தக்கவைத்துக் கொள்ள பாஜக தொடா்ந்து சதி செய்கிறது. இதனால் மாநிலத்தில் நிலை தொடா்ந்து மோசமாகி வருகிறது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

இதையும் படிக்க : நள்ளிரவில் தேர்தல் ஆணையர் நியமனம் அவமரியாதைக்குரியது: ராகுல் காந்தி

விலங்குடன் வந்த எம்எல்ஏ: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை கை, கால்களில் விலங்கிட்டு அந்நாட்டு அரசு அனுப்பி வைத்ததைக் கண்டித்து சமாஜவாதி எம்எல்ஏ அதுல் பிரதான் கை, கழுத்தில் விலங்கு அணிந்தபடி பேரவைக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com