சம்பல் வன்முறை(கோப்புப்படம்)
சம்பல் வன்முறை(கோப்புப்படம்)

சம்பல் வன்முறை: துபை கேங்ஸ்டரின் உதவியாளர் கைது!

உ.பி. மாநில சம்பல் பகுதியில் ஏற்பட்ட வன்முறைக்குக் காரணமான மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on

சம்பல் வன்முறை சம்பவம் தொடர்பாக துபை கேங்ஸ்டர் ஷாரிக் சதா என்பவரின் உதவியாளர் முகமது குலாம் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், முகலாய ஆட்சியாளா் பாபா் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் கடந்த ஆண்டு நவ. 24-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது.

அப்போது துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.

வன்முறை தொடா்பான விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறையினா், அப்பகுதி சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வன்முறை குறித்த விடியோக்களையும் ஆய்வு செய்தனா்.

அதன் அடிப்படையில், கைது நடவடிக்கையை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், வன்முறையைத் தூண்டிவிட்டு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் விஷ்ணு சங்கரை கொல்லத் திட்டம் தீட்டியதற்காக துபையைச் சேர்ந்த கேங்ஸ்டர் ஷாரிக் சதாவின் உதவியாளர் முகமது குலாமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குலாமிடமிருந்து ஏராளமான வெளிநாட்டு ஆயுதங்களும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

”ஷாரிக் சதாவிடம் இருந்து வழிகாட்டுதல்களைப் பெற்ற குலாம், தனது கூட்டாளிகளை ஏவி வன்முறையைத் தூண்டவும், மசூதியில் ஆய்வு நடத்த மனுத் தாக்கல் செய்த வழக்குரைஞரைக் கொல்லவும் திட்டமிட்டதை ஒப்புக் கொண்டார். அவரிடமிருந்து பல்வேறு ஆயுதங்கள்பறிமுதல் செய்யப்பட்டன” என்று காவல்துறை கண்காணிப்பாளர் பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.

சம்பல் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் குலாம் மீது 20 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறை குறித்து காவல்துறையிடம் தெரிவித்த குலாம், அவரது தலைவன் ஷாரிக் சதாவிடம் கடந்த நவம்பர் 23 பேசியபோது அடுத்த நாள் ஆய்வை நடத்தவிடக்கூடாது என தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

500 ஆண்டுகள் பழமையான மசூதி அவர்களின் முன்னோரான பாபர் வழி வந்தது எனவும், அதனைக் காப்பது நமது மதத்தின் கடமை என்றும் வன்முறையைத் தூண்டியவர்கள் பிரசாரம் செய்ததாக காவல்துறை அதிகாரி பிஷ்னோய் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com