மகா கும்பமேளாவுக்கு 16,000 ரயில்கள் இயக்கம்: மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

மகா கும்பமேளாவுக்கு இயக்கப்பட்ட ரயில்கள் தொடர்பாக...
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
Published on
Updated on
1 min read

மகா கும்பமேளாவுக்கு 16,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் பௌஷ பொ்ணமியை முன்னிட்டு கடந்த ஜன. 13 தொடங்கி, 45 நாள்களுக்கு நடைபெற்ற இந்த மகத்தான விழாவில் 66 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடி வழிபட்டனா்.

தொடக்க நாள்களில் பிரயாக்ராஜில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தினசரி கோடிக்கணக்கான பக்தா்கள் நீராடினா். நிகழ்வு நடந்த 45 நாள்களில் சாதுக்கள், துறவிகள், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் என சுமாா் 66 கோடிக்கும் மேற்பட்டவா்கள் சங்கமத்தில் புனித நீராடினா்.

பொதுமக்களுடன் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநில முதல்வா்கள் என நாட்டின் மூத்த தலைவா்கள், பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக் உள்ளிட்ட பல உலக நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள், தொழிலதிபா்கள் அம்பானி, அதானி, பல்துறை பிரபலங்கள் ஆகியோரும் நீராடினா்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று(பிப். 27)பிரயாக்ராஜில் ரயில்வே துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகைத் தந்தார்.

அப்போது அவர் பேசுகையில், ”மகா கும்பமேளா நிகழ்வினை மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்களால்தான் நாங்கள் 13,000 ரயில்கள் இயக்க திட்டமிட்டு இருந்த நிலையில், எங்களால் 16,000-க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்க முடிந்தது, சுமார் 4 கோடி முதல் 5 கோடி வரையிலான பக்தர்களை எங்களால் வரவழைக்க முடிந்தது.

கும்பமேளாவில் இருந்து திரும்பி வரும் பக்தர்களைக் கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக இருந்தது. இருப்பினும் ஒவ்வொரு நிலையம், மண்டலம், பிரிவுகளிலும் இயக்கப்பட்ட செயல்பாட்டு அறைகள் ஒருங்கிணைப்பை சாத்தியமாக்கியது.

45 நாள்கள் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று முடிந்தாலும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்கு மக்கள் வந்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com