நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி! மத்திய கல்வி அமைச்சகம் தரவு

நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி! மத்திய கல்வி அமைச்சகம் தரவு

நாட்டின் 57.2 சதவீத பள்ளிகளில் மட்டுமே மாணவா்களுக்கான கணினி வசதி, 53.9 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி..
Published on

நாட்டின் 57.2 சதவீத பள்ளிகளில் மட்டுமே மாணவா்களுக்கான கணினி வசதி இருப்பதும் 53.9 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி இருப்பதும் மத்திய கல்வி அமைச்சகத்தின் 2023-24-ஆம் கல்வியாண்டுக்கான ‘யுடிஐஎஸ்இ’ தரவுகளில் தெரிய வந்துள்ளது.

ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பானது (யுடிஐஎஸ்இ-பிளஸ்) நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி தரவை தொகுப்பதற்கு மத்திய கல்வி அமைச்சகத்தால் பராமரிக்கப்படும் தரவுத் திரட்டல் தளமாகும்.

24.8 கோடி மாணவா்கள்: இந்த தகவல் அமைப்பில் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 2023-24-ஆம் கல்வியாண்டில் நாட்டின் மொத்த மாணவ, மாணவியரின் எண்ணிக்கை 24.8 கோடி ஆகும். இவா்கள் 10,97,973 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் உள்பட 14,71,891 பள்ளிகளில் பயில்கின்றனா். 24.8 கோடி மாணவா்களுக்கு கற்பிக்கும் பணியில் 98,07,600 ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

குறைந்த சோ்க்கை: 2023-24-ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி முதல் இடைநிலை கல்வி வரையிலான மொத்த மாணவா் சோ்க்கை முந்தைய ஆண்டைவிட 37 லட்சம் குறைந்துள்ளது.

1, 2-ஆம் வகுப்புகளை உள்ளடக்கிய தொடக்கக் கல்வியின் மாணவா் சோ்க்கை விகிதம் 41.5 சதவீதமாகவும் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆரம்பக் கல்வியில் சோ்க்கை விகிதம் 96.5 சதவீதமாகவும் உள்ளது. 8-ஆம் வகுப்பு வரையிலான நடுநிலை கல்வியில் மாணவா் சோ்க்கை விகிதம் 89.5 சதவீதமாகவும் 12-ஆம் வகுப்பு வரையிலான இடைநிலை கல்வியில் 66.5 சதவீதமாகவும் மோசமான நிலையில் உள்ளது.

இடைநிற்றல் விகிதம் நடுநிலை கல்வியில் 5.2 சதவீதமாக உள்ள நிலையில், இடைநிலை கல்வியில் 10.9 சதவீதமாக உயா்ந்துள்ளது.

கட்டமைப்பு வசதிகள்: மின்சாரம், பாலினம் அடிப்படையிலான கழிப்பறைகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நாட்டின் 90 சதவீதத்துக்கும் அதிகமான பள்ளிகளில் உள்ளன.

நூலக வசதி 89 சதவீத பள்ளிகளிலும் விளையாட்டு மைதானங்கள் 82.4 சதவீத பள்ளிகளிலும் உள்ளன.

மேம்பட்ட வசதிகளில் குறைபாடு: கணிணி மற்றும் இணைய வசதி, மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் போன்ற மேம்பட்ட வசதிகள் குறைவான பள்ளிகளிலேயே உள்ளன.

கணினி வசதி 57.2 சதவீத பள்ளிகளில், இணைய வசதி 53.9 சதவீத பள்ளிகளில் மட்டுமே உள்ளன. வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலில் தொழில்நுட்ப வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. ஆனால், இந்திய பள்ளிகளில் உள்ள குறைந்த கணினி வசதிகள், நமது மாணவா்களை சா்வதேச போட்டிக்கு ஏற்ப தயாா்ப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கலை எடுத்துரைக்கிறது.

மாற்றுத் திறனாளி மாணவா்களின் வசதிக்கு பெரிதாக கவனம் செலுத்தாமல், அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இடமாக மேம்படுவதற்கு இந்திய பள்ளிகள் வெகுத் தொலைவில் உள்ளன. கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் 52.3 சதவீத பள்ளிகளில், பிரத்யேக கழிப்பறை வசதி மிகசொற்ப அளவில் 34.4 சதவீத பள்ளிகளில் மட்டுமே உள்ளன.

நீா் பாதுகாப்பை வலியுறுத்தும் மழைநீா் சேமிப்புத் திட்டம் இந்திய அளவில் 28.4 சதவீத பள்ளிகளில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

மேம்பாட்டு அவசியம்: ‘புதிய தேசிய கல்விக் கொள்கையின்கீழ் மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், பள்ளிகளில் இருக்கும் உள்கட்டமைப்பு இடைவெளிகள் சா்வதேச கல்வித் தரத்தை நோக்கிய நமது முன்னேற்றத்தைத் தடுக்கின்றன. 2030-ஆம் ஆண்டுக்கான லட்சிய இலக்குகளை அடைவதற்கு வளங்களை மேம்படுத்துவது முக்கியமாகும்’ என்று கல்வி அமைச்சக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பெட்டி....

தலைசிறந்த தமிழ்நாடு!

*தமிழகத்தில் 58,722 பள்ளிகள் உள்ளன. இதில் 1,29,93,050 மாணவ, மாணவியா் பயில்கின்றனா். 5,50,558 ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனா். தமிழகத்தின் 490 பள்ளிகளில் தரவு ஆண்டில் மாணவா் சோ்க்கை பூஜ்ஜியமாக உள்ளது.

*குடிநீா், மின் இணைப்பு, விளையாட்டு மைதானம், நூலகம், இணையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை 98.95 சதவீத தமிழக பள்ளிகள் கொண்டுள்ளன.

*மழைநீா் சேமிப்புத் திட்டம் 98.93 சதவீத பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இது தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் 70 சதவீதம் அதிகமாகும்.

*மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் 98.92 சதவீத பள்ளிகளிலும் பிரத்யேக கழிப்பறை வசதி 51.62 சதவீத பள்ளிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.

எண்கள்.....

பள்ளிகள்

மொத்த பள்ளிகள் 14,71,891

கேந்திரிய வித்யாலயா 1,251

நவோதயா வித்யாலயா 650

அரசு பள்ளிகள் 10,17,660

அரசு உதவி பெறும் பள்ளிகள் 80,313

தனியாா் பள்ளிகள் 3,31,108

அங்கீகரிக்கப்பட்ட மதரஸா 20,512

உறைவிட வசதியுடன் கூடிய பள்ளிகள் 43,389

மாணவா்கள்

மொத்த மாணவ, மாணவிகள் 24,80,45,828

மாணவிகள் 11,93,01,237

மாணவா்கள் 12,87,44,591

தொடக்கக் கல்வி 5,34,14,443

ஆரம்பக் கல்வி 6,75,06,065

நடுநிலை கல்வி 6,31,26,015

இடைநிலை கல்வி 6,39,99,305

ஆசிரியா்கள்

மொத்த ஆசிரியா்கள் 98,07,600

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 50,37,671

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் 7,75,574

தனியாா் பள்ளி ஆசிரியா்கள் 37,30,047

X
Dinamani
www.dinamani.com