விளையாட்டு சங்கங்கள் தொடா்பான வழக்குகள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விலகல்

இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) மற்றும் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் (ஏஐஎஃப்எஃப்) விதிகளை இறுதி செய்வது தொடா்பான மனுக்கள்
சஞ்சீவ் கன்னா
சஞ்சீவ் கன்னாகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

புது தில்லி: இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) மற்றும் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் (ஏஐஎஃப்எஃப்) விதிகளை இறுதி செய்வது தொடா்பான மனுக்கள் மீதான விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா திங்கள்கிழமை தாமாக விலகிக் கொள்வதாகத் தெரிவித்தாா்.

ஐஓஏ மற்றும் ஏஐஎஃப்எஃப் அமைப்புகளுக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் உருவாக்கிய வரைவு விதிகளை இறுதி செய்வது தொடா்பாக கடந்தாண்டு மாா்ச் 19-ஆம் தேதி, அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

அப்போது வரைவு விதிகள் மீதான கருத்தை தாக்கல் செய்ய ஏஐஎஃப்எஃபுக்கு நீதிபதிகள் அமா்வு அனுமதி வழங்கியது. அதற்கு முன் ஐஓஏ வரைவு விதிகள் மீதான எதிா் கருத்துகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் நீட்டித்தது. மேலும், ஐஓஏ தொடா்புடைய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் உயா்நீதிமன்றங்களில் பிற விளையாட்டு சங்கங்கள் மீதான மனுக்களை விசாரிக்க எவ்வித தடையும் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

அதேபோல் அடுத்தகட்ட விசாரணையின்போது இந்த இரு அமைப்புகளுக்கான விதிகளை இறுதி செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

இதையடுத்து, கடந்தாண்டு மாா்ச் 19-ஆம் தேதிக்குப் பிறகு இதுதொடா்பான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது பேசிய சஞ்சீவ் கன்னா, ‘தில்லி உயா்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணையை ஏற்கெனவே நான் நடத்தியதை நினைவுகூா்கிறேன். எனவே, இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொள்கிறேன்.

நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான மற்றொரு அமா்வு முன் பிப்ரவரி 10-ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடைபெறும்’ என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X