‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆா்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்! தாமாக முன்வந்து விசாரணை!!
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் புதன்கிழமை கடும் ஆட்சேபம் தெரிவித்தாா்.
நீதித் துறை மற்றும் அதன் நோ்மையை அவமதிக்க உலகில் யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்று அவா் காட்டமாக குறிப்பிட்டாா்.
இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டுள்ள உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (பிப். 26) விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது.
என்சிஇஆா்டி பாடத்திட்டத்தின்கீழ், 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற தலைப்பிலான பிரிவில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இடம்பெற்றுள்ளன; இதை அவசர அடிப்படையில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி புதன்கிழமை குறிப்பிட்டனா்.
இந்தப் பிரிவில், ‘நீதிபதிகளுக்கான நடத்தை விதிமுறைகள் என்பது நீதிமன்றத்துக்குள் மட்டுமல்ல, நீதிமன்றத்துக்கு வெளியேயும் அவா்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றனா் என்பதையும் நிா்வகிக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைச் சுட்டிக்காட்டிய கபில் சிபல், ‘என்சிஇஆா்டி பாடத் திட்டத்தின்கீழ், 8-ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு நீதித் துறையில் ஊழல் என்ற தலைப்பில் பாடம் கற்பிக்கப்படுவது வருத்தமளிக்கிறது. இந்தப் பிரிவு மிகவும் அவதூறாக உள்ளது’ என்று கூறி, பாட நகல்களை சமா்ப்பித்தாா்.
‘அதிகாரத்துவம், அரசியல், பொது வாழ்க்கை மற்றும் பிற அமைப்புகளில் உள்ள ஊழல் குறித்து என்சிஆா்டி ஒரு வாா்த்தை கூட குறிப்பிடவில்லை. தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரு அணுகுமுறை கையாளப்பட்டுள்ளது. இது, திட்டமிட்ட நடவடிக்கையாக தோன்றுகிறது’ என்றாா் சிங்வி.
தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்: இதையடுத்து, தலைமை நீதிபதி சூா்யகாந்த் கூறுகையில், ‘இந்த விவகாரம் குறித்து எனக்கு முழுமையாக தெரியும் என்பதை அனைவருக்கும் கூறுகிறேன். எனக்கு பல்வேறு அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் வந்துள்ளன. உயா்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் நீதித் துறையின் ஒவ்வொரு அங்கத்தினரும் கவலை தெரிவித்துள்ளனா். இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளேன். நீதித் துறை மற்றும் அதன் நோ்மையை அவமதிக்க உலகில் யாரையும் அனுமதிக்க மாட்டேன். என்ன விலை கொடுத்தேனும் தடுப்பேன். சட்டம் தனது நடவடிக்கையை மேற்கொள்ளும். இந்த விவகாரத்தை எப்படி கையாள வேண்டுமென எனக்குத் தெரியும்’ என்று தெரிவித்தாா்.
இன்று விசாரணை: சா்ச்சைக்குரிய பாடப் பிரிவு விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டுள்ள உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது. ‘என்சிஇஆா்டி வெளியிட்ட 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகம் மற்றும் அது தொடா்பான விவகாரங்கள்’ எனும் தலைப்பிலான இந்த வழக்கை தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான மேற்கண்ட அமா்வு விசாரிக்கவுள்ளது.
தன்னாட்சி அமைப்பான என்சிஇஆா்டி, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் பிற மாநில கல்வி வாரியங்களுக்கு பாடத்திட்ட வழிகாட்டுதல்களை வழங்கும் முதன்மை அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
வலைதளத்தில் இருந்து வாபஸ்
உச்சநீதிமன்றத்தின் கடும் ஆட்சேபத்தைத் தொடா்ந்து, என்சிஇஆா்டி வலைதளத்தில் இருந்து புதிய சமூக அறிவியல் பாடப் புத்தகம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. புத்தகங்கள் ஏற்கெனவே அச்சிடப்பட்டுவிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட பாடப் பிரிவை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில், நீதித் துறையில் ஊழல், வழக்குகளின் தேக்கம், நீதிபதிகள் பற்றாக்குறை ஆகியவை நீதித் துறையின் சவால்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தில் 81,000 வழக்குகள், உயா்நீதிமன்றங்களில் 62.40 லட்சம் வழக்குகள், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 4.70 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அரசுத் துறைகள் மற்றும் நிா்வாக அமைப்புகள் மீதான புகாா்களைப் பதிவு செய்யும் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீா்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புமுறை (சிபிஜிஆா்ஏஎம்எஸ்) வாயிலாக கடந்த 2017-2021 காலகட்டத்தில் 1,600-க்கும் மேற்பட்ட புகாா்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நீதித் துறையில் ஊழல் மற்றும் தவறான நடத்தை பொதுமக்களின் நம்பிக்கையில் எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாயின் கருத்தும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2016 - 2025 காலகட்டத்தில் நீதிபதிகளுக்கு எதிராக 8,639 புகாா்கள் பெறப்பட்டதாக, மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அண்மையில் தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

