காங்கிரஸின் உண்மை முகம் இதுதான்: ராகுல் பேச்சுக்கு பாஜக கண்டனம்!

இந்திய அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராடுவதாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜெ.பி. நட்டா, ராகுல் காந்தி, நிர்மலா சீதாராமன்
ஜெ.பி. நட்டா, ராகுல் காந்தி, நிர்மலா சீதாராமன்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை மட்டுமல்ல, இந்திய அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராடுவதாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி,

1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தைப் பெறவில்லை; ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகே இந்தியா சுதந்திரம் அடைந்ததாக மோகன் பாகவத் கூறிய கருத்து ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் கைப்பற்றிவிட்டன. தற்போது பாஜக, ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக மட்டுமல்லாமல் இந்திய அரசுக்கு எதிராக நாம் போராடுவதாக ராகுல் குறிப்பிட்டிருந்தார்.

ராகுல் காந்தியின் இக்கருத்துக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

காங்கிரஸ் கட்சியில் மறைக்க ஏதுமில்லை. காங்கிரஸின் கோரமுகம் அக்கட்சியின் தலைவராலேயே வெளிப்பட்டுள்ளது. நாடு எதை அறிந்துவைத்துள்ளது என்பதைத் தெளிவாகக் கூறியதற்காக ராகுலை பாராட்டுகிறேன். அதாவது இந்தியாவுக்கு எதிராக ராகுல் போராடுகிறார்.

ராகுல் காந்தியும் அவரைச் சார்ந்தவர்களும் நகர்புற நக்சல்கள் மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் மாநிலங்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் என்பதில் எந்தவித ரகசியமும் இல்லை. அவருடைய செயல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. ராகுல் செய்தவை அல்லது கூறியவை அனைத்தும் இந்தியாவை பிளவுபடுத்தும் வகையிலும் சமூகத்தில் விரிசல் ஏற்படுத்தும் வகையிலும் மட்டுமே உள்ளது என நட்டா பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்திருப்பது எதற்காக? என ராகுலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

அரசியலமைப்பின் மீது பிரமாணம் செய்து பதவியேற்ற காங்கிரஸ் கட்சி, இப்போது, ​​"நாங்கள் இப்போது பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாமல் இந்திய அரசையும் எதிர்த்துப் போராடுகிறோம்" என்று கூறுகிறது. அப்படியானால், ராகுல் காந்தி எதற்காக அரசியலமைப்பின் நகலை கையில் வைத்திருக்கிறார்? என நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com