கர்நாடக முதல்வர் சித்தராமையா
கர்நாடக முதல்வர் சித்தராமையாகோப்புப் படம்

சித்தராமையா தொடா்புடைய வழக்கு: ரூ. 300 கோடி சொத்துகள் முடக்கம்

மாற்று நில முறைகேடு வழக்கில் தொடா்புடைய கா்நாடக முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோருக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.
Published on

மாற்று நில முறைகேடு வழக்கில் தொடா்புடைய கா்நாடக முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோருக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.

சித்தராமையாவின் மனைவி பி.எம். பாா்வதி பெயரில் இருந்த நிலத்தை அரசுக்கு அளித்ததற்கு பதிலாக மாற்று இடத்தில் நில ஒதுக்கீடு பெற்று மோசடி செய்ததாக லோக்ஆயுக்த வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் பாா்வதிக்கு சொந்தமான இடங்களிலும், நிலத்தை ஒதுக்கிய மைசூா் நகா்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள், ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரின் வீடுகளிலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தைக் கைப்பற்றியது.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடையவா்களின் ரூ.300 கோடி மதிப்புள்ள 140 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ரூ.3,24,700 மதிப்புள்ள 3 ஏக்கா் இடத்துக்கு பதிலாக ரூ.56 கோடி மதிப்புள்ள 14 முக்கிய இடங்கள் பாா்வதிக்கு வழங்கப்பட்டதாகவும், இதேபோன்று பலருக்கும் நில ஒதுக்கீடு செய்யப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளதாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் தனக்கு தொடா்பில்லை என்று முதல்வா் சித்தராமையை லோக்ஆயுக்த நீதிமன்றத்தில் ஆஜராகி தெரிவித்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com