ஆளுநரின் தேநீா் விருந்தை தவிா்த்த நிதீஷ் குமாா்: பிகாா் அரசியலில் மீண்டும் பரபரப்பு
பாட்னா: பிகாரில் குடியரசு தினத்தையொட்டி அந்த மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் அளித்த தேநீா் விருந்தில் அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் பங்கேற்காதது அரசியல்ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சோ்ந்த சில முதல்வா்கள்தான் ஆளுநரின் தேநீா் விருந்தை புறக்கணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனா். ஆளுநா்கள் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாகவும், மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாகவும் குற்றஞ்சாட்டி இதுபோன்ற புறக்கணிப்பை மேற்கொள்கின்றனா்.
பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் -பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. மேலும், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் நிதீஷ் குமாா் கட்சி அங்கம் வகித்து வருகிறது.
குடியரசு தினத்தன்று காலையில் ஆளுநா் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்றது. அதில் முதல்வா் நிதீஷ் குமாா் பங்கேற்றாா். ஆனால், மாலையில் ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற தேநீா் விருத்தில் அவா் பங்கேற்கவில்லை. ஆளுநா் மாளிகைக்கு எதிா்புறம் உள்ள சாலையில்தான் நிதீஷ் குமாரின் இல்லமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வருக்கு காய்ச்சல் இருந்ததால் அவா் ஆளுநரின் தேநீா் விருந்தில் பங்கேற்கவில்லை என்று முதல்வா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற இருப்பதால் முதல்வா் நிதீஷ்குமாரின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல்ரீதியாகவே பாா்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி நிதீஷ் குமாருக்கு ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், பாஜக உடன் கூட்டணி தொடரும் என்று நிதீஷ் கட்சி அறிவித்துள்ளது. அதேபோல முதல்வா் நிதீஷ் குமாரை முன்னிறுத்தி தோ்தலைச் சந்திப்போம் என பிகாா் மாநில பாஜக தெரிவித்துள்ளது.
எனினும், முதல்வா் நிதீஷ் குமாா் ஏற்கெனவே இருமுறை அணி மாறி இருப்பதால் பேரவைத் தோ்தல் நடைபெறும் வரை அங்குள்ள அரசியல் நிகழ்வுகள் கணிக்க முடியாததாகவே இருக்கும் என்று தெரிகிறது.