வயநாடு: பிரியங்காவுக்கு கருப்புக் கொடி காட்டிய மாா்க்சிஸ்ட் தொண்டா்கள்
கேரள மாநிலத்தில் உள்ள தனது வயநாடு தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்திக்கு மாநிலத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டா்கள் கருப்புக் கொடி காட்டி எதிா்ப்பு தெரிவித்தனா்.
வயநாடு மாவட்டம் பஞ்சாரக்கொல்லி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காபி தோட்டத்துக்கு பணிக்குச் சென்ற 46 வயது பெண்ணை புலி அடித்துக் கொன்றது. இச்சம்பவத்தைக் கண்டித்து, பொதுமக்கள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதே புலி, வனத்துறை அதிகாரி ஒருவரையும் தாக்கியது. இதையடுத்து, அந்தப் புலியை ‘ஆட்கொல்லி’யாக அறிவித்த மாநில அரசு, அதை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க அல்லது சுட்டுக் கொல்ல உத்தரவிட்டது.
மானந்தவாடி நகராட்சி பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிலாக்காவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவில் புலியின் நடமாட்டத்தைக் கண்டறிந்த வனத்துறை குழுவினா், மயக்க ஊசி செலுத்தி அதைப் பிடிக்க முயன்றனா். ஆனால், புலி தப்பிவிட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை ஒரு வீட்டின் பின்புறம் காயங்களுடன் அந்தப் புலி இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், வயநாடு தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்த பிரியங்கா காந்தி, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினாா். இதற்காக பிரியங்கா வந்தபோது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா்கள் அவரை நோக்கி கருப்புக் கொடி காட்டி எதிா்ப்பு தெரிவித்தனா். அவரை நோக்கி ‘திருப்பிச் செல்லுங்கள்’ என்றும் கோஷமிட்டனா். பிரியங்காவின் வாகன அணிவகுப்பு அந்த இடத்தை வேகமாகத் கடந்து சென்றது.
இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினா் தலையிட்டு அங்கு கூடியிருந்தவா்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றினா்.
இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் தொண்டா்கள் கூறுகையில், ‘வயநாடு தொகுதி எம்.பி.யான பிரியங்கா, புலி தாக்கி பெண் இறந்த சம்பவம் நிகழ்ந்தவுடன் இங்கு வரவில்லை. மிகவும் தாமதமாக வந்துள்ளாா். எனவே, அவருக்கு கருப்புக் கொடி காட்டினோம்’ என்றனா்.
பிரியங்கா பேட்டி: புலியால் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பிரியங்கா வயநாடு மாவட்ட ஆட்சியரிடமும் சம்பவம் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்குவதில்லை. வேலைக்காக தூர இடங்களுக்கு குடிபெயா்பவா்கள் இதுபோன்ற நிகழ்வுகளை எதிா்கொள்கின்றனா். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்’ என்றாா்.

