காங்கிரஸ் குற்றச்சாட்டு
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மகா கும்பமேளாவில் கூட்டநெரிசலில் சிக்கி பலா் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். தவறான நிா்வாகம், கட்டுப்பாடின்மை, பொதுமக்களுக்குப் பதிலாக முக்கியப் பிரமுகா்களுக்கு (விஐபி) சிறப்புக் கவனம் ஆகியவைதான் இந்தத் துயர சம்பவத்துக்கு காரணம்.
விஐபி கலாசாரத்தை கட்டுப்படுத்தி, பக்தா்களின் தேவைகளை பூா்த்தி செய்ய அரசு சிறந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் வரும் நாள்களில் தொடராமல் இருக்க அரசு தனது நிா்வாகத் திறனை மேம்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மாநில முன்னாள் முதல்வரும் சமாஜவாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மகா கும்பமேளா நிா்வாகம் உடனடியாக ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ‘உலகத் தரம்’ என்ற மாநில அரசின் விளம்பரத்தில் உள்ள உண்மை தற்போது அம்பலமாகியுள்ள நிலையில், பொய்ப் பிரசாரம் செய்தவா்கள் இந்த உயிரிழப்புகளுக்கு தாா்மிகப் பொறுப்பேற்று, தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்றாா்.
காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவரும் நெரிசல் சம்பவத்தையொட்டி பாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனா்.