
ஃபாக்ஸ்கான் நிறுவனமானது, 300 சீன பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை, அதன் இந்திய உற்பத்தி தொழிற்சாலைகளிலிருந்து திரும்பப் பெற்றுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஐஃபோன் அசெம்பிள் நிறுவனமாக ஃபாக்ஸ்கான் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய தொழிற்சாலைகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் திரும்பப் பெறப்பட்டிருக்கும் நிலையில், தொழிலநுட்ப செயல்பாடுகளை நிர்வகிக்கும் பணியில் வெறும் தைவான் பணியாளர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையால், ஆப்பிள் இந்தியாவின் ஐஃபோன் 17 உற்பத்தி சவாலாக மாறியிருப்பதாகவும், இந்தியாவிலிருந்து ஆப்பிள் ஐஃபோன் உற்பத்தி தயாரிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எதிர்பாரர்தவிதமாகவும் அமைந்துள்ளது.
எனினும், கடந்த இரண்டு மாதங்களாகவே, தென்னிந்தியாவில் உள்ள ஃபாக்ஸ்கானின் முக்கிய தொழிற்சாலைகளிலிருந்து சீன பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபணர்களின் வெளியேற்றம் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
காரணம் என்ன?
இதுவரை அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் வெளியிடப்படாத நிலையில், சீனாவுக்கு எதிரான, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற தொழில் வாய்ப்பு அல்லது தொழிற்சாலைகளை சீனாவிலிருந்து வேறு நாடுகளுக்கு நகர்த்தும் வாய்ப்புள்ள நாடுகளுக்கு, தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்ற நிபுணர்கள் பரிமாற்றத்தை கட்டுப்படுத்த சீனா அதிகாரப்பூர்வமற்ற முறையில் உத்தரவிட்டிருப்பதாகவும், அதன் ஒருபகுதியாகவே சீன பொறியாளர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
2026ஆம் ஆண்டுக்குள் சீனாவை சார்ந்திருப்பதைக் குறைத்து, இந்தியாவின் ஆப்பிள் ஐஃபோன் உற்பத்தியை விரிவுபடுத்தும் பணியில் ஃபாக்ஸ்கான் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், இந்திய பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஆப்பிள் ஐஃபோன் உற்பத்தியில், நிபுணத்துவம் பெற்ற சீன பொறியாளர்கள் இல்லாதது உற்பத்தி தரத்தைப் பராமரிப்பதில் சவாலை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.