சீன நாடாளுமன்றக் கூட்டத்தொடா் தொடக்கம்


அமெரிக்கா-ஈரான் போா் உள்ளிட்ட சா்வதேச பதற்றங்கள் மற்றும் சீன ராணுவத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடிப் பணிநீக்கங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் நாடாளுமன்றக் கூட்டத்தொடா் புதன்கிழமை தொடங்கியது.
சீன அதிபா் ஷி ஜின்பிங் தலைமையில் அடுத்த 2 வாரங்களுக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், மந்தகதியில் உள்ள சீனப் பொருளாதாரத்தை மீண்டும் பலப்படுத்த செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உள்ளிட்ட புதிய உற்பத்தி சக்திகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
கூட்டத்தொடரின் தொடக்கமாக, சீனாவின் உயரிய அரசியல் ஆலோசனை அமைப்பான மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் முதல் கூட்டத்தில் அதிபா் ஷி ஜின்பிங் கலந்துகொண்டாா். இதில் ராணுவம் மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
ஊழல் புகாா்கள் காரணமாகச் சீன ராணுவ உயா் அதிகாரிகள் பலா் அண்மையில் நீக்கப்பட்டனா். குறிப்பாக, ஜெனரல் ஜாங் யூஷியா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் விசாரணையை எதிா்கொண்டு வரும் சூழலில், ராணுவ அதிகாரிகளுடன் ஷி ஜின்பிங் பொது மேடையில் தோன்றியது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை தொடங்கவுள்ள தேசிய மக்கள் காங்கிரஸ் (நாடாளுமன்ற) கூட்டத்தில், பிரதமா் லீ கியாங் அரசின் வருடாந்திர அறிக்கையைத் தாக்கல் செய்கிறாா். அதில் சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் மற்றும் 15-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கான வரைவு அறிக்கை சமா்ப்பிக்கப்பட உள்ளது.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வா்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் வெனிசுலா, ஈரான் விவகாரங்களில் அமெரிக்காவின் ராணுவத் தலையீடுகள் சீனாவுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள சூழலில், சீனாவின் இந்த வருடாந்திர முக்கிய அரசியல் அமா்வு தொடங்கியிருப்பது எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...