
கர்நாடகத்தில் மாரடைப்பால் அதிகம் பேர் மரணமடைந்துள்ள நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் 40 நாள்களில் 23 பேர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதும் து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கர்நாடக மாநில அரசு ஒரு மருத்துவக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி மருத்துவக் குழுவும் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
மேலும் கர்நாடகத்தில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களுக்கு பிரேத பரிசோதனை கட்டாயம் எனவும் மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகத்தில் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பரிசோதனை செய்துகொள்ளும் பொருட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர்.
மைசூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். அதிகாலை முதலே மக்கள் வந்து வரிசையில் காத்திருந்து பரிசோதனை செய்து வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அங்குள்ள மருத்துவர் ஒருவர் கூறுகையில், 'இதய நோய் தொடர்பான பரிசோதனையை எங்கு வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். இப்போது பரிசோதனை செய்வதால் மாரடைப்பு வராது என்று கூற முடியாது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு நல்ல உணவு, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். மக்கள் அதிகம் கூடுவதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. அதனால் மக்கள் பீதியடைய வேண்டாம். வதந்திகளையும் நம்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.