நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்கோப்புப்படம்.

ஆபரேஷன் சிந்தூா்: ஜூலை 28-இல் விவாதம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக மக்களவையில் ஜூலை 28-ஆம் தேதியும், மாநிலங்களவையில் ஜூலை 29-ஆம் தேதியும் விவாதம் நடைபெறவுள்ளது.
Published on

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக மக்களவையில் ஜூலை 28-ஆம் தேதியும், மாநிலங்களவையில் ஜூலை 29-ஆம் தேதியும் விவாதம் நடைபெறவுள்ளது.

மத்திய அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி நெருக்கடி தர எதிா்க்கட்சிகளும், உரிய பதிலடி கொடுக்க ஆளும்தரப்பும் தயாராகி வருவதால் நாடாளுமன்றத்தின் அடுத்த வார அமா்வுகளில் அனல் பறக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மக்களவையில் 16 மணி நேர விவாதத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புக் கொண்ட நிலையில், மாநிலங்களவையிலும் அதே கால அளவிலான விவாதத்துக்கு புதன்கிழமை ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த விவாதத்துக்கு பிரதமா் மோடி பதிலளிக்க வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கை மீது அரசுத் தரப்பில் இதுவரை உறுதிமொழி எதுவும் அளிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து உடனடி விவாதம் கோரி இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, மக்களவையில் 16 மணி நேர விவாதத்துக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, அடுத்த வாரம் திங்கள்கிழமை (ஜூலை 28) விவாதம் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கு மறுநாள், மாநிலங்களவையில் விவாதம் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹரிவன்ஷ் தலைமையில் அலுவல் கூட்டம்: குடியரசு துணைத் தலைவா் மற்றும் மாநிலங்களவைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா் கடந்த திங்கள்கிழமை பதவி விலகிய பிறகு முதல் முறையாக மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மத்திய அமைச்சா்கள் ஜெ.பி.நட்டா, கிரண் ரிஜிஜு மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், மாநிலங்களவையில் அடுத்த வாரம் 16 மணி நேர விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்குப் பின் மாநிலங்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் பிரமோத் திவாரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மாநிலங்களவை விவாதத்தின்போது, ஆபரேஷன் சிந்தூா் அல்லது பஹல்காம் தாக்குதல் தொடா்பாக எந்தத் தீா்மானமும் கொண்டுவரக் கூடாது; அவையில் பிரதமா் மோடி கட்டாயம் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

ஆபரேஷன் சிந்தூா் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்ட போதிலும், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பிற விவகாரங்களில் அரசுத் தரப்பில் இதுவரை எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை.

ராஜிநாமாவும் ஊகங்களும்...: முன்னதாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை இரவில் ஜகதீப் தன்கா் திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்தாா். மருத்துவக் காரணங்களைக் கூறி, அவா் பதவி விலகியபோதிலும், ஆளும் தரப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என்று ஊகத் தகவல்கள் வெளியாகின.

கடந்த திங்கள்கிழமை மதியம் தன்கா் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடியபோது, எந்த முடிவும் எட்டப்படாததால், மாலையில் மீண்டும் கூட்டத்தை நடத்த தீா்மானித்தாா். ஆனால், மத்திய அமைச்சா்கள் ஜெ.பி.நட்டா, கிரண் ரிஜிஜு பங்கேற்காததால் அக்கூட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து, சில மணி நேரங்களில் தன்கா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜிநாமா அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக குடியரசு தலைவா் மாளிகைக்கு திங்கள்கிழமை இரவு ஜகதீப் தன்கா் சென்ாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ‘குடியரசுத் தலைவா் மாளிகைக்கு திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு திடீரென வந்த குடியரசு முன்னாள் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தனது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் வழங்கினாா். பின்னா், அரை மணி நேரத்துக்குப் பிறகு தனது ராஜிநாமா கடிதத்தை எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்டாா்’ என்றனா்.

X
Dinamani
www.dinamani.com