
ஏர் இந்தியா விபத்தில் பலியான பிரிட்டனைச் சேர்ந்த இருவரின் குடும்பத்தினர் தங்களுக்கு கிடைத்த உடலுடன் டிஎன்ஏ பரிசோதனை பொருந்தவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்த நிலையில், ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார்.
விமானத்தில் 12 ஊழியர்கள், பயணிகளில் இந்தியாவைச் சேர்ந்த 169 பேர், 53 பிரிட்டன் நாட்டினர், 7 போர்த்துகீசிய நாட்டினர் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவர் பயணித்திருந்தனர்.
இதில், பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர்பிழைத்த நிலையில், மற்ற 241 பேரின் உடலும் அடையாளம் தெரியாத வகையில் எரிந்தது.
இதனால், அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அனைத்து உடல்களின் மாதிரிகளும் எடுக்கப்பட்டு, அவர்களின் உறவினர்களின் மாதிரிகளுடன் ஒப்பிட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, அனைத்து உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட நிலையில், இரண்டு பேரின் உடல்கள் மாறி வந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்திருப்பதாவது:
”இந்தியாவில் இருந்து 24 முதல் 26 உடல்கள் வந்தன. இதையடுத்து, பிரிட்டனில் மீண்டும் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இரண்டு சடலங்கள் மட்டும் உறவினர்களின் மாதிரிகளுடன் பொருந்தவில்லை.
தங்கள் உறவினர்களின் சடலம் இல்லை எனத் தெரிந்தவுடன் இறுதிச் சடங்கு நடத்தும் திட்டத்தை கடைசி நேரத்தில் கைவிட்டனர்.
மேலும், மற்றொரு சவப்பெட்டியில் இரண்டு வெவ்வேறு நபர்களின் உடல் பாகங்கள் இருந்தன. அவற்றை உறவினர்கள் பிரித்தெடுக்கும் நிலை ஏற்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் அகமதாபாத் மருத்துவமனையில் இருந்து சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டியில் சடலங்கள் கொடுக்கப்பட்டதாகவும் ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும், இந்த விவகாரம் குறித்து அரசு அல்லது ஏர் இந்தியா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.