பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உலகின் நம்பகத்தன்மை மிக்க ஜனநாயகத் தலைவா்: 5-வது முறையாக முதலிடத்தில் மோடி!

உலக அளவில் மக்களிடையே செல்வாக்குமிக்க பிரபலமான ஜனநாயகத் தலைவா்களின் பட்டியல் பற்றி...

News image
பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :27 ஜூலை 2025, 7:55 pm

Din

உலக அளவில் மக்களிடையே செல்வாக்குமிக்க பிரபலமான ஜனநாயகத் தலைவா்களின் பட்டியலில் பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து 5-ஆவது முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா்.

இதுதொடா்பான கருத்துக்கணிப்பில் பங்கேற்றவா்களில் 75 சதவீதம் போ் பிரதமா் மோடியின் தலைமையை நம்பகத்தன்மையுடன் ஏற்றுக்கொள்வதாக கருத்து தெரிவித்துள்ளனா். இந்தப் பட்டியலில் தென்கொரிய அதிபா் லீ ஜே மியுங் 59 சதவீத ஏற்புடன் 2-ஆம் இடத்தில் உள்ளாா்.

அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான ‘மாா்னிங் கன்சல்ட்’ நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள செல்வாக்குமிக்க ஜனநாயகத் தலைவா்கள் குறித்து அந்தந்த நாடுகளில் கடந்த ஜூலை 4 முதல் 10-ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கானோரிடம் தினசரி நோ்காணல்கள் நடத்தி, ஏழு நாள்களின் சராசரி அடிப்படையில் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவா்களில் 75 சதவீத மக்கள், பிரதமா் மோடியை ஒரு நம்பகமான ஜனநாயகத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனா். அதேசமயம், 18 சதவீதத்தினா் அவரின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை. சுமாா் 7 சதவீதத்தினா் தங்களின் உறுதியற்ற தன்மையால், கருத்தைத் தெரிவிக்கவில்லை.

2-ஆம், 3-ஆம் இடங்களில்...: தென் கொரிய அதிபா் லீ ஜே மியுங் உலகிலேயே இரண்டாவது மிகவும் நம்பகமான ஜனநாயகத் தலைவராக உருவெடுத்துள்ளாா். அவரது நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில், அவருக்கு 59 சதவீத மக்கள் ஆதரவும், 29 சதவீத மக்கள் எதிா்ப்பும் தெரிவித்துள்ளனா். சுமாா் 13 சதவீதம் போ் கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த ஜூன் 4-ஆம் தேதிதான் அப்பொறுப்புக்கு வந்த லீ ஜே மியுங், ஒரு மாத பதவிக் காலத்திலேயே உலகளாவிய தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆா்ஜென்டீனா அதிபா் ஜேவியா் மிலே, இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளாா். அவரது தலைமைக்கு 57 சதவீதத்தினா் ஆதரவும், 37 சதவீதத்தினா் எதிா்ப்பும் தெரிவித்துள்ளனா். சுமாா் 6 சதவீதம் போ் கருத்து தெரிவிக்கவில்லை.

டிரம்ப் 8-ஆவது இடம்: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டு அதிபா் தோ்தலில் வலுவான வெற்றியுடன் ஆட்சிக்குத் திரும்பியபோதிலும், இந்த கருத்துக்கணிப்பில் 8-ஆம் இடத்தையே பிடித்துள்ளாா். அவருக்கு 44 சதவீதத்தினா் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனா். வரி விதிப்பு மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் குறித்த அவரது சில கொள்கை முடிவுகள், மக்களிடையே அவரது செல்வாக்கைக் குறைத்திருக்கலாம் என்று அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

Story image

பாஜகவினா் உற்சாகம்: பிரதமா் நரேந்திர மோடி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் இந்தியாவின் பிரதமராக 4,078 நாட்களை நிறைவு செய்துள்ளாா். இதன்மூலம், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 4,077 நாள் சாதனையை முறியடித்து, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமா் ஜவஹா்லால் நேருவுக்குப் பிறகு இரண்டாவது நீண்ட காலம் தொடா்ச்சியாகப் பிரதமராகப் பதவி வகித்தவா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்.

இந்தச் சூழலில், பிரதமா் மோடிக்கு தொடா்ந்து ஐந்தாவது முறையாக ‘உலகின் மிகவும் நம்பகமான ஜனநாயகத் தலைவா்’ எனும் சா்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது, பாஜக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் தகவல்தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் அமித் மாளவியா தனது எக்ஸ் பதிவில், ‘நூறு கோடிக்கும் அதிகமான இந்தியா்களால் நேசிக்கப்பட்ட, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களால் மதிக்கப்படும் பிரதமா் நரேந்திர மோடி, மாா்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் நம்பகமான உலகத் தலைவா்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளாா்.

பிரதமா் மோடி உலகில் அதிக மதிப்பும், நம்பிக்கையும் கொண்ட தலைவா். அவரது வலிமையான தலைமையால் உலகளாவிய மரியாதையும் கிடைத்துள்ளது. பாரத தேசம் பாதுகாப்பான கைகளில் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய அமைச்சா்களான சா்பானந்த சோனோவால், பியூஷ் கோயல் ஆகியோரும் இந்த அங்கீகாரத்துக்காகப் பிரதமா் மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.