
தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல என்று மக்களவையில் கனிமொழி எம்.பி. பேசினார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் பேசிய அவர்,
"தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்ற தொனியில் அமைச்சர் அமித் ஷா பேசினார். தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல. இந்திய வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து முதலில் பேரணி நடத்தியது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். தேசத்தை எந்த வகையிலும் தமிழ்நாடு விட்டுக் கொடுத்ததில்லை. நாங்கள் இந்த தேசத்தோடுதான் நிற்கிறோம்!
அனைத்துக் கட்சி கூட்டத்தில்அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு ஆதரவாக நின்றோம். ஆனால் நீங்கள் எங்களை எதிர்க்கிறீர்கள்.
காங்கிரஸ் கட்சியினர் நேருவை நினைவில் வைத்திருப்பதைவிட பாஜகவினர் ஒவ்வொரு முறையும் நினைவு கூறுகிறார்கள். நான் அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதனால் பெரியார், அம்பேத்கர் பற்றி படிக்கும் தமிழக இளைஞர்கள் இப்போது நேரு பற்றியும் படிக்கிறார்கள்.
மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கம் அளிக்க நாங்கள் பல நாடுகளுக்குச் சென்றோம். ஏன் சென்றோம்? சில வாய்ப்புகள் கொண்டாடப்பட வேண்டியவை அல்ல. துக்கம் அனுசரிக்கப்பட வேண்டியவை. அமைதி எங்களை தோற்கடித்துவிட்டது. இந்திய மக்களை நீங்கள் தோற்கடித்துவிட்டீர்கள்.
வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் இந்த போரை நிறுத்தியதாகக் கூறுகிறார். அதற்கு என்ன பதில் அளித்தீர்கள்?
எதிர்க்கட்சியினர் மீதுதான் அமைச்சர் அமித் ஷா குற்றம் சுமத்துகிறார். நாங்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முயற்சிக்கிறோம்.
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டின் பெருமைகள் மற்றும் கலாசாரம் மீது திடீர் அன்பு, பாசம் எல்லாம் வந்துவிடுகிறது. ஆனால் கீழடி அறிக்கைக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்க மறுக்கிறது. இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்குகிறது.
பிரதமர் மோடி சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்துள்ளார். சோழன் கங்கையை கொண்டான், கங்கையை வென்றான், தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
விஸ்வகுரு என்று கூறுகிறீர்கள். தீவிரவாதத் தாக்குதல்களில் இருந்து விஸ்வகுரு என்ன கற்றுக்கொண்டார்? அவர் எதையும் கற்றுக்கொண்டதில்லை, கற்றுக்கொடுக்கப் போவதுமில்லை. சோஃபியா குரேஷியை அவமதித்த அமைச்சர் மீது பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுத்தார்? அரசியலுக்காக ஏன் நாட்டை பிரித்தாள பார்க்கிறீர்கள்? மதரீதியாக நாட்டில் பிரிவினையை உருவாக்குவதுடன், வெறுப்புணர்வையும் பரப்புவது ஏன்?
இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எங்களை பிரிக்காதீர்கள். விஸ்வகுரு என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, தீவிரவாத தாக்குதல் நடக்கும்போதெல்லாம் என்ன செய்கிறார்?
பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றுள்ளாரா? தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு மத்திய அரசு என்ன உதவி செய்கிறது?
மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங், மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அவரிடம் இருந்து பணிவைக் கற்றுக் கொள்ளுங்கள். பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பு? புல்வாமா தாக்குதல் தொடர்பான கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.
நீங்கள் இன்னும் 20 ஆண்டுகள் இங்கு ஆட்சியில் இருப்பீர்கள் என்று கூறுகிறீர்கள். எங்களுக்கு அது பிரச்னை இல்லை. ஏனெனில் இங்கு மக்களுக்குதான் அதிகாரம் உள்ளது. மக்களுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். அவர்கள்தான் எங்களை எதிர்க்கட்சியாக இருக்க தேர்வு செய்கிறார்கள். தேர்தல் ஆணையம் அல்ல.
ஜனநாயகத்தைக் காப்பாற்றவும் தேர்தல் ஆணைய நடைமுறையைப் பாதுகாக்கும் விதமாக இந்த விவாதம் இருக்க வேண்டும்.
மக்களின் பாதுகாப்பு குறித்து நீங்கள் தயாராக இருக்கவில்லை. பாகிஸ்தான் போர் மட்டுமல்ல, அதற்கு மேலும் நிறைய இருக்கிறது. மக்களின் பாதுகாப்புக்கு நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
இந்த அரசு தொடர்ந்து நீடிப்பது போல அதிகாரிகள் பலரும் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கின்றனர். ஏன் வேறு அதிகாரிகள் இல்லையா?" என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.