
பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்ததாகவும், ஆனால், இந்திய மக்களின் ஒற்றுமை அதனை முறியடித்துவிட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிறைவேற்றிவிட்டதாகவும், இந்திய மக்களின் நலன்களை விரும்பாதவர்களை கண்ணாடியாகக் காட்ட விரும்புவதாகவும் மோடி குறிப்பிட்டுப் பேசினார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் (இரு நாள்) தொடர் விவாதத்தின் இறுதியாக பிரதமர் மோடி பதிலுரை வழங்கி வருகிறார்.
இதில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் அச்சமடைந்துள்ளது குறித்து அவர் பேசியதாவது,
''இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன். இக்கட்டான சூழலில் ஒற்றுமையுடன் இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளோம். பதிலடி தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தோம். அது பெரும் பலன் அளித்தது.
பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்தது. மதத்தின் பெயரைக் கேட்டு அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்தும் சதித்திட்டத்துடன் அவர்கள் இதனை அரங்கேற்றினர். ஆனால், பாகிஸ்தானின் சதியை இந்திய மக்களின் ஒற்றுமை முறியடித்துவிட்டது.
பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக ஒழித்துக்காட்டுவோம். இந்திய மக்களை மீண்டும் சீண்டினால், பயங்கரவாதிகளே யோசித்துப்பார்க்காத அளவுக்கு அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படும்.
இந்திய மக்கள் நலன்களை விரும்பாதவர்களை கண்ணாடியாகக் காட்ட விரும்புகிறேன். இந்தியாவின் பதில் தாக்குதலை பாகிஸ்தானால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் இனி எடுபடாது; இந்தியா ஒருபோதும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களுக்கு பயப்படாது'' என மோடி உரையாற்றினார்.
இதையும் படிக்க | போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டது உண்மை: மக்களவையில் ராகுல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.