
புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே போரை தான்தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை 29 முறை சொல்லிவிட்டார், அவர் ஒரு பொய்யர் என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? என ராகுல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் பற்றிய சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல், மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்க கடற்படையின் அச்சுறத்தலை புறந்தள்ளி அப்போதைய பிரதமர் வங்கதேச போரை நடத்தினார். இந்திய ராணுவத்தை சரியாகக் கையாளும் திறன் 1971ல் இருந்தது. வங்கதேசப் போரில் ஒரு லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தனர். புதிய நாடு உருவானது. போரை நடத்தி இந்திரா காந்தி வலிமையோடு செயல்பட்டார்.
இந்திய ராணுவத்தை பயன்படுத்த விரும்பினால், 100 சதவீதம் முழுமையாகப் பயன்படுத்துங்கள். முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். கட்டுப்படுத்தக் கூடாது.
ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு சீனா பல வகைகளில் உதவி செய்ததது. ஆனால், ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனா என்ற பெயரை ஒரு முறைக் கூட உச்சரிக்கவில்லையே. ஆபரேஷன் சிந்தூர் நள்ளிரவு 1.05 மணிக்குத் தொடங்கியது. ஆனால், இந்தியா அதற்கு முன்பே, பாகிஸ்தானைத் தொடர்பு கொண்டு, ராணுவ அமைப்புகள் அல்லாதவற்றை குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்படும் என தகவல் கொடுத்துள்ளது. இது நான் சொல்வது அல்ல. இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரே சொன்னது.
போர் தொடங்கும்போது, இந்தியா முதலில் நினைத்தது, பாகிஸ்தானுடன் மோதுகிறோம் என்று, ஆனால் பிறகுதான் தெரிந்தது, பாகிஸ்தான் - சீனாவுடன் மோதுகிறோம் என்பதே.
இந்திரா காந்தியின் தைரியம் மோடிக்கு உள்ளதா? டிரம்ப் சொன்னது பொய் என மோடியால் கூற முடியும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பொய்யர் என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியால் கூற முடியுமா? என ராகுல் கேள்வி எழுப்பினார்.
பாகிஸ்தானின் வான் பாதுகாப்பை அமைப்பை தாக்க அறிவுறுத்தப்படாதது ஆபத்தாக அமைந்தது என்று ராகுல் சுட்டிக்காட்டிப் பேசினார்.
இந்திய ராணுவப் படையை, பிரதமர் மோடி தன்னுடைய பிம்பத்தைக் காப்பாற்றுவதற்காகப் பயன்படுத்துவது ஆபத்தானது, இந்திய ராணுவம், நாட்டின் பிம்பத்தைக் காக்கவே பயன்படுத்த வேண்டும் என்று கூறி ராகுல் உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிக்க.. போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டது உண்மை: மக்களவையில் ராகுல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.