
காஷ்மீரின் பாரமுல்லா - ஜம்மு வின் உதம்பூர் இடையேயான ரயில் பாதையை, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கவிருக்கிறார்.
பல ஆண்டு கால எதிா்பாா்ப்புக்குரிய காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கிவைக்கும் அவா், உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தையும் நாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளாா்.
இந்த ரயில் திட்டம் கடந்த 130 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. நாட்டின் பிற பகுதியிலிருந்து காஷ்மீருக்கு ரயில் பாதை என்பது கிட்டத்தட்ட 130 ஆண்டு கால கனவு. இதன் ஒரு பகுதியாக, கட்டமைக்கப்பட்டிருக்கும் அஞ்ஜி பாலம், இந்தியாவின் முதல் கேபிள் -ரயில் பாலம்.
நாளை தொடங்கி வைக்கப்படும் ரயில் திட்டம் மூலம் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து நேரடியாக காஷ்மீர் செல்ல முடியுமா என்பது தெரியவில்லை என்றும், ஜம்முவில் அமைந்துள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள கத்ரா ரயில் நிலையத்தில் இறங்கி மாற்று ரயில் மூலம் காஷ்மீர் செல்ல முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீருடன் நேரடி ரயில் இணைப்புக்கான உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தடத் திட்டம், கடந்த 1997-இல் தொடங்கப்பட்டது. பல்வேறு பிரச்னைகளால், இந்த திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க முடியாமல் போயிருக்கிறது.
மொத்தம் 272 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் இதுவரை 161 கி.மீ. தொலைவு வழித்தடம் ஏற்கெனவே பல்வேறு கட்டங்களாக தொடங்கப்பட்டது. இறுதியாக 111 கி.மீ. தொலைவுள்ள கத்ரா-பனிஹால் வழித்தடப் பணிகள் கடந்த ஜனவரியில்தான் நிறைவடைந்தன.
திட்டப் பணிகள்தான் தாமதம் என்றால், திறப்பிலும் கூட தாமதம் ஏற்பட்டது. காஷ்மீருக்கான நேரடி ரயில் சேவையை பிரதமா் மோடி கடந்த ஏப்ரலில் திறந்துவைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக பிரதமரின் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜூன் மாதம் 6ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட இருக்கிறது.
இதன் சிறப்பே, உதம்பூா் - ஸ்ரீநகா் - பாரமுல்லா ரயில் வழித்தடத் திட்டத்தில் கத்ரா - பனிஹால் வழித்தடப் பணிகள் கடுமையான சவால்களைக் கடந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 111 கி.மீ. தொலைவில் 97.4 கி.மீ வழித்தடம் சுரங்கங்கள் வழியாக செல்கிறது. குறிப்பாக, 12.77 கி.மீ. நீளமுள்ள டி-50 சுரங்கம் நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கம் என்ற சிறப்பைப் பெறுகிறது.
பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இரும்புப்பாலம்
செனாப் நதியின் குறுக்கே 369 மீட்டா் உயரத்தில் பிரம்மாண்ட இரும்புப் பாலம் கட்டப்பட்டுள்ளது. ஈஃபில் டவரை விட அதிக உயரமுடைய இப்பாலம், உலகின் மிக உயரமான ரயில் பாலம் மற்றும் உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் ஆகிய சிறப்புகளையும் கொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.