
புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டுக்குள் இருந்துகொண்டு, பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பஞ்சாப் காவல்துறை தரப்பில் செருப்புத் தொழிலாளி முதல் டெய்லர் மற்றும் சிம் கார்டு விற்பனையாளர் வரை பலரை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு ரகசிய தகவல்களை அளித்ததாகக் குற்றம்சாட்டி கைது செய்திருக்கிறது.
இதன் மூலம், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, உளவாளிகளைத் தேர்வு செய்து நியமிப்பதற்கான விதிகளை மாற்றியிருப்பதாக பஞ்சாப் காவல்துறை கூறுகிறது. இந்தியாவில் இருந்து ரகசியத் தகவல்களை திரட்டுவதற்காக மட்டுமல்ல, நாட்டுக்குள் மக்களிடையே மிகப்பெரிய கருத்துகணிப்புகளை நடத்துவதற்கும் யூடியூபர்களை பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அண்மையில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஜோதி மல்ஹோத்ரா என்ற யூடியூபர் ஹரியாணாவில் கைது செய்யப்பட்டார். அதுபோல ஜஸ்பிர் சிங் என்ற யூடியூபரும் கைது செய்யப்பட்டார். அவருக்கு 11 லட்சம் பின்தொடர்வோர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவர்களுடன் சேர்ந்து கடந்த ஒரு மாதத்தில் செருப்புத் தொழிலாளி, தையல்காரர், சிம் கார்டு விற்பனையாளர் போன்றவர்கள், உளவு வேலை பார்த்ததாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
யூடியூபர்கள் என்றால், எதையும் புகைப்படம், விடியோ எடுக்கலாம், எங்கும் தடையின்றி நுழையலாம் என்பதால் பாகிஸ்தான், அதுபோன்றவர்களுக்கு பணத்தாசை காட்டி, உளவு வேலைக்கு அமர்த்தியிருக்கலாம் என்றும், முக்கிய அணைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை அவர்கள் விடியோ எடுத்து யூடியூப்பிலும் பதிவேற்றலாம் என்பதால் பெரும்பாலான யூடியூபர்களுக்கு பாகிஸ்தான் வலைவிரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.