ராகுல் - சித்தராமையா சந்திப்பில் பேசியது என்ன?

கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு பற்றி...
bengaluru stampede: Rahul gandhi -Siddaramaiah meeting
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில்...X
Published on
Updated on
1 min read

கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விவாதித்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் இன்று(செவ்வாய்க்கிழமை) சந்தித்துப் பேசினர்.

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைமைக்கு முதல்வரும் துணை முதல்வரும் விளக்கமளித்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்தில் பேசியது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் - மாநில பொறுப்பாளர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் இன்று சந்தித்தனர். வருகிற ஜூன் 12 ஆம் தேதி கர்நாடக சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பில் கர்நாடக அரசு செய்தவற்றை கொள்கையளவில் ஒப்புக்கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஆனால், தரவுகள் குறித்து ஒரு சில சமூகத்தினருக்கு அச்சம் இருக்கிறது. அதனால் கர்நாடக அரசு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் பரிந்துரைத்துள்ளது.

கர்நாடகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை, பெங்களூருவில் சமீபத்தில் நடைபெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்தும் மாநில அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் காங்கிரஸ் தலைமைக்கு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் விளக்கமளித்தார்.

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு கர்நாடகத்தை முற்றிலுமாக புறக்கணிக்கிறது. மோடி அரசு கர்நாடக மாநிலத்திற்கு அநீதி இழைக்கிறது" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com