எங்கள் நாட்டை விடவும் இந்தியாவில் சிறந்த கட்டமைப்பு; அமெரிக்கர்களே சொன்னார்கள்: நிதின் கட்கரி!

இந்திய சாலை கட்டமைப்பை அமெரிக்காவுடன் ஒப்பிட்டு நிதின் கட்கரி பேசியது பற்றி...
நிதின் கட்கரி
நிதின் கட்கரி
Published on
Updated on
1 min read

அமெரிக்காவைவிட இந்தியாவில் சிறந்த உள்கட்டமைப்பு இருப்பதாக சில அமெரிக்கர்களே தன்னிடம் சொன்னதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய நெடுஞ்சாலைத் துறை தொடர்பான ஏஎன்ஐ நேர்க்காணல் ஒன்றில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை பேசியிருந்தார்.

அப்போது, இன்னும் இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு இணையான சாலை வசதிகள் இந்தியாவில் தரம் உயர்த்தப்படும் என்றும், தற்போது பார்ப்பது ரீல்ஸ் மட்டுமே, இனிதான் ’மெயின் பிக்சரை’ பார்ப்பீர்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், அவர் பேசியதாவது:

”பாஜக அரசால் அமைக்கப்பட்ட நல்ல சாலைகளால் இந்தியாவில் தளவாடச் செலவுகள் குறைந்துள்ளது. ஏற்றுமதி அதிகரித்தால், விவசாயம், உற்பத்தி, சேவைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் மேம்படும்.

சீனாவில் தளவாடச் செலவுகள் 8%, அமெரிக்கா மற்றும் ஐரோப்ப நாடுகளில் 12% ஆக இருக்கும் நிலையில், மோசமான சாலைகள், துறைமுகங்கள், போக்குவரத்து நெரிசலால் இந்தியாவில் 16 சதவிகிதமாக இருந்தது.

பாஜக தலைமையிலான அரசு சாலைகளை மேம்படுத்தியதால், தளவாடச் செலவுகள் 9 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதனால், ஏற்றுமதியின் போட்டித்தன்மை மாறியுள்ளது.

தற்போது, 25 பசுமைவழி விரைவுச் சாலைகள், 3,000 கி.மீ துறைமுக இணைப்பு நெடுஞ்சாலை மற்றும் மத சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகள் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே 36 சுரங்கப் பாதைகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். 23 நிறைவடைந்துள்ளன, மேலும் 5 சுரங்கப்பாதைகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன.” எனத் தெரிவித்தார்.

உலகில் இரண்டாவது பெரிய சாலை வலையமைப்பைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் மொத்தம் 1.46 லட்சம் கிலோ மீட்டர் நீளம் கொண்டவை.

பிப்ரவரி 2025இல் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2004 இல் 65,569 கி.மீ. ஆக இருந்த தேசிய நெடுஞ்சாலை, 2014 இல் 91,287 கி.மீ. ஆகவும், 2024 இல் 1,46,145 கி.மீ. ஆகவும் விரிவடைந்துள்ளது.

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பாதைகளைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகள் 2014 இல் 18,371 கி.மீ. ஆக இருந்து 2024 இல் 48,422 கி.மீ. ஆக 2.6 மடங்கு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com