
பஞ்சாபில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் காலிஸ்தான் ஆதரவாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹோஷியார்பூர் மாவட்டத்திலுள்ள நூர்பூர் ஜட்டான் என்ற கிராமத்தில் பக்ஷிராம் என்பவரது குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில், அம்பேத்கரின் சிலை ஒன்று அமைக்கப்பட்டு, உள்ளூர்வாசிகளால் பராமரிக்கப்பட்டு வந்தது.
சமீபத்தில், அந்தச் சிலையின் கைகள் உடைத்து சேதமாக்கப்பட்டன. மேலும், இந்தச் சம்பவம் பதிவு செய்யப்பட்ட விடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்திய அம்பேத்கர் சேனையின் பொதுச் செயலாளர் குல்வாந்த் சிங் பூனோ என்பவர் மஹில்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்நிலையில், அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டதற்கு தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரான குர்பட்வாந்த் சிங் பன்னுன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். இவரது தூண்டுதலினால், அவரது கூட்டாளிகள் சிலர் சிலையை உடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஹோஷியாபூர் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், குல்வாந்த் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 298 (வழிபாட்டுத் தலத்தை அசுத்தப்படுத்தல் அல்லது தாக்குதல்) மற்றும் 61(2) (குற்றவியல் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு, கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் அவ்தார் சிங் கரிம்புரி, அம்மாநிலத்திலுள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, கடந்த சில நாள்களாக பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பின்கோடுகளுக்கும் முடிவுரையா? வந்துவிட்டது டிஜிபின்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.