
ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சம்பவத்தில் சிக்கியதாக பதிவிட்ட விமான நிர்வாகம், தற்போது விபத்தில் சிக்கியதாக உறுதி செய்துள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் பயணித்த 242 பேரின் நிலை என்னவென்று தெரியாத நிலையில், விபத்து குறித்து ஏர் இந்தியா நிர்வாகம் முதலில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விமானம் சம்பவத்தில் சிக்கியதாக தெரிவித்திருந்தது.
இதனால், விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? போன்ற குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில், விமானம் விபத்தில் சிக்கியதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிசெய்து மீண்டும் பதிவிட்டுள்ளது.
அதில் தெரிவித்திருப்பதாவது:
”ஆமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் இன்று விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிபடுத்துகிறது.
ஆமதாபாத்தில் இருந்து பிற்பகல் 13.38 மணிக்கு புறப்பட்ட போயிங் 787-8 ரக விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், ஒரு கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர் ஆவர்.
காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு 1800 5691 444 என்ற பிரத்யேக அவசர எண்ணை நாங்கள் அமைத்துள்ளோம்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஏர் இந்தியா முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, தனது சமூக ஊடகத்தின் முகப்பு புகைப்படங்களை கருப்பு நிறத்தில் ஏர் இந்தியா நிறுவனம் மாற்றியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.