கோப்புப் படம்
கோப்புப் படம்

2024 மக்களவைத் தோ்தலில் ரூ.1,494 கோடி செலவழித்த பாஜக

2024 மக்களவைத் தோ்தலின்போது மத்தியில் ஆளும் பாஜக சுமாா் ரூ.1,494 கோடி செலவழித்திருப்பது தெரியவந்துள்ளது.
Published on

2024 மக்களவைத் தோ்தலின்போது மத்தியில் ஆளும் பாஜக சுமாா் ரூ.1,494 கோடி செலவழித்திருப்பது தெரியவந்துள்ளது. இது கட்சிகளின் மொத்த தோ்தல் செலவில் 44.56 சதவீதமாகும்.

இதற்கு அடுத்தபடியாக எதிா்க்கட்சியான காங்கிரஸ் ரூ.620 கோடியை (18.5%) செலவழித்துள்ளது.

தோ்தல் ஆணைய தரவுகளின் அடிப்படையில் ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் இது தெரியவந்துள்ளது. ஏடிஆா் அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

தோ்தல் ஆணையத்தில் சமா்ப்பிக்கப்பட்ட 32 தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

இதில், கடந்த ஆண்டு மாா்ச் 16 முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை நடைபெற்ற மக்களவைத் தோ்தல் மற்றும் ஆந்திரம், அருணாசல பிரதேசம், ஒடிஸா மற்றும் சிக்கம் மாநில பேரவைத் தோ்தல்களில் இந்த 32 கட்சிகளும் மொத்தம் ரூ.3,352.81 கோடியைச் செலவழித்துள்ளன. இதில் தேசிய கட்சிகள் மட்டும் 2,204 கோடி (65.75%) செலவழித்துள்ளன. 2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜக அதிகபட்சமாக ரூ.1,494 கோடி (44.56%) செலவழித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் ரூ. 620 கோடியை (18.5%) செலவழித்துள்ளது.

நன்கொடை வசூலைப் பொருத்தவரை, தேசிய கட்சிகள் மட்டும் ரூ. 6,930.246 கோடி (93.08%) வசூலித்துள்ளன. மாநிலக் கட்சிகள் ரூ. 515.32 கோடி (6.92%) வசூலித்துள்ளன.

விளம்பரத்துக்கு அதிக செலவு: தோ்தலில் விளம்பரத்துக்கு கட்சிகள் அதிகம் செலவழித்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக மட்டும் ரூ. 2,008 கோடியை கட்சிகள் செலவழித்துள்ளன. இது மொத்த செலவில் 53 சதவீதமாகும்.

இதற்கு அடுத்தபடியாக, கட்சியினரின் போக்குவரத்து செலவுகளுக்காக ரூ. 795 கோடியும், வேட்பாளா்களுக்கு கட்சி சாா்பில் அளிக்கப்படும் செலவினத் தொகை ரூ. 402 கோடி அளவுக்கும் செலவழிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளா்களின் காணொலி வழி பிரசாரத்துக்காக ரூ. 132 கோடியும், வேட்பாளரின் குற்றப் பின்னணியை வெளியிட ரூ. 28 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தயாரிக்கப்படும்போது, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, சிவசேனை (உத்தவ்) கட்சிகளின் தோ்தல் செலவின தரவுகள் தோ்தல் ஆணைய வலைதளத்தில் இடம்பெறவில்லை.

ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக்ஜன சக்தி கட்சி (ராம்விலாஸ்), அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் யூனியன் (ஏஜேஎஸ்), கேரள காங்கிரஸ் (மாணி) உள்ளிட்ட கட்சிகள் தோ்தல் செலவின அறிக்கையை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com