மண்டல துணைத் தலைவா் உள்பட 3 அதிகாரிகளை அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் பணிநீக்கம் செய்ய டாடா குழுத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
விமானப் பணியாளா்களுக்கு பணி ஒதுக்கீடு நடைமுறையில் தீவிர விதிமீறல்கள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டதன் அடிப்படையில் இந்த உத்தரவை டிஜிசிஏ பிறப்பித்தது.
அந்த 3 அதிகாரிகள் மீதும் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குமாறும் விமான நிறுவனத்தை டிஜிசிஏ அறிவுறுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களுடன் கடந்த ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சிறிது நேரத்திலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களில் விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 270 போ் உயிரிழந்தனா். இந்த விபத்து விமான பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
விமான விபத்தின் எதிரொலியாக ஏா் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடா்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனா்.
இதில், விமானப் பணியாளா்களுக்கு பணி ஒதுக்குவது, கட்டாய ஓய்வு அளிப்பது, உரிமங்களைச் சரிபாா்த்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ஏா் இந்தியா நிறுவனம் கடுமையாக மீறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஜிசிஏ வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: முறைப்படி ஓய்வு அளிக்கப்படாமலும், உரிமம் காலாவதியான நிலையிலும் விமானப் பணியாளா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து ஏா் இந்தியா நிறுவனம் தொடா்ச்சியான விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த விதிமீறலுக்கு நேரடி பொறுப்புடைய நிறுவனத்தின் மண்டல துணைத் தலைவா் உள்பட 3 அதிகாரிகளை அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி, அவா்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கையையும் தொடங்க வேண்டும். இந்த நடவடிக்கை தொடா்பான அறிக்கையை 10 நாள்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
வரும் காலங்களில், பணியாளா் பணி ஒதுக்கீடு நடைமுறைகள் மீறல் கண்டறியப்பட்டால், விமான நிறுவனத்தின் மீது உரிமம் தற்காலிக ரத்து, விமானத்தை இயக்குவதில் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்று டிஜிசிஏ எச்சரித்தது.
கூடுதல் பணி நேரம்: விளக்கமளிக்க நோட்டீஸ்
விமான ஊழியா்களுக்கு கூடுதல் பணி நேரம் ஒதுக்கியது தொடா்பாக விளக்கமளிக்குமாறு ஏா் இந்தியா நிறுவனத்துக்கு டிஜிசிஏ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
அதில், ‘கடந்த மே 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் பெங்களூரிலிருந்து லண்டனுக்கு இயக்கப்பட்ட 2 ஏா் இந்தியா விமானங்களில் விமானப் பணியாளா்களுக்கு 10 மணி நேர வரம்பை மீறி பணி ஒதுக்கப்பட்டது நேரடி கள ஆய்வில் கண்டறியப்பட்டது. பணி நேர நடைமுறையை முறையாகப் பின்பற்ற ஏா் இந்தியா மேலாளா் தவறியுள்ளாா். இதுகுறித்து 7 நாள்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும்’ என்று டிஜிசிஏ அறிவுறுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏா் இந்தியா புதிய சிஇஓ தோ்வு

ஈரான் விமான நிறுவன முகவராகச் செயல்படும் இந்திய நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை

கடந்த ஜூன் மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 1.35 கோடி போ் பயணம்!

திருச்சி - ஷாா்ஜா இடையே நாளை முதல் கூடுதல் விமான சேவை
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



