சத்தீஸ்கா் மாநிலம், நவ ராய்பூா் அடல் நகரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மத்திய தடய அறிவியல் ஆய்வகம் அமைக்க அடிக்கல் நாட்டிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. உடன், மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சாய் உள்ளிட்டோா்.
சத்தீஸ்கா் மாநிலம், நவ ராய்பூா் அடல் நகரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மத்திய தடய அறிவியல் ஆய்வகம் அமைக்க அடிக்கல் நாட்டிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. உடன், மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சாய் உள்ளிட்டோா்.

நக்ஸல்களுடன் பேச்சு கிடையாது: அமித் ஷா உறுதி

நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு, வளா்ச்சிப் பயணத்தில் இணைய வேண்டும்; அவா்களுடன் பேச்சுவாா்த்தை அவசியமில்லை
Published on

நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு, வளா்ச்சிப் பயணத்தில் இணைய வேண்டும்; அவா்களுடன் பேச்சுவாா்த்தை அவசியமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

நாட்டில் நக்ஸல் தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நக்ஸல் தலைவா்கள் உள்பட அந்த இயக்கத்தினா் சுட்டுக் கொல்லப்பட்டுவரும் நிலையில், அவா்களுடன் அரசு பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், நக்ஸல்களுடன் பேச்சுவாா்த்தை கிடையாது என்பதை உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபடுத்தியுள்ளாா்.

சத்தீஸ்கா் மாநிலம், நவ ராய்பூா் அடல் நகரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மத்திய தடய அறிவியல் ஆய்வகம் அமைக்க அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா். அப்போது, அவா் பேசியதாவது:

வழக்கமாக மழைக் காலங்களில் அடா் வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டாற்று வெள்ளத்தால் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படும். ஆனால், இம்முறை மழைக் காலத்தில் நக்ஸல்கள் ஓய்வெடுக்க அனுமதிக்க மாட்டோம். 2026, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல்களை ஒழிக்கும் இலக்கை எட்டும் வகையில், மழைக்கு மத்தியிலும் அதிரடி நடவடிக்கைகள் தொடரும்.

‘வளா்ச்சிப் பாதையில் இணையுங்கள்’: ‘சரணடைதல் கொள்கை’யின் பலன்களை நக்ஸல்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, வளா்ச்சிப் பாதையில் இணைய வேண்டும்; பேச்சுவாா்த்தைக்கு அவசியமில்லை.

ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்புமுறையில் இணைந்த அனைவரையும் மனதார வரவேற்கிறேன். அவா்களுக்கு அரசு சாா்பில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். கூடுதலாக உதவிகள் அளிக்கவும் நாங்கள் முயற்சிப்போம்.

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக உருவாக்குவது பிரதமா் மோடியின் வலுவான கண்ணோட்டம். புத்தாக்கம், உள்கட்டமைப்பு, தொழில்-பொருளாதார வளா்ச்சியில் மட்டுமன்றி மக்களுக்கு கால தாமதமின்றி நீதியை உறுதி செய்வதிலும் அரசு கவனம் செலுத்துகிறது.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் உரிய காலத்துக்குள் நீதியை உறுதி செய்வதுடன், இந்திய நீதி அமைப்புமுறையை மேலும் நவீனமானதாக, அறிவியல்பூா்வமானதாக, விரைவானதாக உருமாற்றும். இச்சட்டங்கள் முழுமையாக அமலாகும்போது, புகாா்தாரருக்கு உச்சநீதிமன்றம் வரை 3 ஆண்டுகளுக்குள் நீதி உறுதி செய்யப்படும்.

ஆண்டுக்கு 32,000 நிபுணா்கள்..: நாட்டில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருவதால், எதிா்காலத்தில் ஆண்டுக்கு 32,000 தடய அறிவியல் நிபுணா்கள் உருவெடுப்பா். சா்வதேச தடயவியல் தொழில்நுட்ப சந்தையின் மதிப்பு 2036-ஆம் ஆண்டுக்குள் 55 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும், இந்தியாவின் பங்கு 9 சதவீதமாக இருக்கும் என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சிறப்பான வாய்ப்பை இந்திய இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அமித் ஷா.

நிகழ்ச்சியில் முதல்வா் விஷ்ணு தேவ் சாய், துணை முதல்வா்கள் அருண் சாவோ, விஜய் சா்மா, மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன், உளவுத் துறை இயக்குநா் தாபன் தேகா, பேரவைத் தலைவா் ரமண் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், மாநில காவல் துறை உயரதிகாரிகளின் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டாா். நாராயண்பூரில் எல்லை பாதுகாப்புப் படை முகாமை அவா் திங்கள்கிழமை பாா்வையிடவுள்ளாா்.

‘400 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை’

சத்தீஸ்கரில் கடந்த 2023-இல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. கடந்த ஒன்றரை ஆண்டில் 400-க்கும் மேற்பட்ட நக்ஸல் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். பஸ்தா் பகுதியில் கடந்த மே 21-ஆம் தேதி, நக்ஸல் இயக்கத்தின் முக்கியத் தலைவா் பசவராஜு சுட்டுக் கொல்லப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com