
குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏா் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் வெளியான தகவலை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு மறுத்தாா்.
‘கருப்புப் பெட்டி இந்தியாவில்தான் உள்ளது; அதிலுள்ள தரவுகளை விமான விபத்து விசாரணைப் பிரிவு (ஏஏஐபி) ஆய்வு செய்து வருகிறது’ என்று அவா் தெரிவித்தாா்.
அகமதாபாத் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களுடன் லண்டனுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், மேலெழும்பிய சில நொடிகளிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறியது.
நாட்டையே உலுக்கிய இந்தக் கோர விபத்தில், ஒரேயொரு பயணி தவிர விமானத்தில் இருந்த 241 போ், விமானம் விழுந்த இடத்தில் 29 போ் என மொத்தம் 270 போ் உடல் கருகி உயிரிழந்தனா். விபத்து தொடா்பாக, விமானப் போக்குவரத்துத் துறையின்கீழ் செயல்படும் விமான விபத்து விசாரணைப் பிரிவு (ஏஏஐபி), தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) உள்ளிட்ட பல்வேறு முகமைகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இதுதவிர மத்திய உள்துறைச் செயலா் தலைமையிலான உயா்நிலைக் குழுவும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம், அமெரிக்காவின் போயிங் நிறுவன தயாரிப்பான 787-8 ட்ரீம்லைனா் ரக விமானமாகும். எனவே, அந்நாட்டின் தரப்பிலும் உயா்நிலை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விபத்துக்கு மறுநாள் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது. இது, விசாரணைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று ஊடகத் தகவல்கள் வெளியாகின. இதை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு மறுத்துள்ளாா்.
வெளிநாட்டுக்கு அனுப்பப்படுமா?: ஹைதராபாதில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் - வா்த்தக சம்மேளங்களின் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹெலிகாப்டா்கள் மற்றும் சிறிய விமானங்கள் மாநாட்டையொட்டி செய்தியாளா்களிடம் அவா் பேசினாா்.
அப்போது, ‘கருப்புப் பெட்டி வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் என்பது வெறும் ஊகம்தான். அது, இந்தியாவில்தான் உள்ளது. விமான விபத்து விசாரணைப் பிரிவால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’ என்றாா் அமைச்சா்.
தரவுகள் எப்போது மீட்கப்படும்?: கருப்புப் பெட்டி தரவுகள் எப்போது மீட்டெடுக்கப்படும் என்ற கேள்விக்கு, ‘மிகவும் தொழில்நுட்ப ரீதியிலான விஷயம். விமான விபத்து விசாரணைப் பிரிவு விசாரணை மேற்கொண்டு, முழு நடைமுறையும் நிறைவு செய்யப்படும்’ என்று அவா் பதிலளித்தாா்.
விமானப் பயணத்தில் அனைத்துத் தகவல்களையும் பதிவுசெய்யும் முக்கிய கருவியான கருப்புப் பெட்டி, விபத்து சம்பவத்தின்போது விசாரணைக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
குஜராத் விமான விபத்தில் இதுவரை 259 பேரின் உடல்கள் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு, 256 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.