எலான் மஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இறக்குமதி வரி அதிகமாக இருந்த நிலையில், டெஸ்லா கார்களை விற்பனைக்கு கொண்டுவர சிரமமாக இருப்பதாக எலான் மஸ்க் முன்னர் கூறியிருந்தார். இதனிடையே, இறக்குமதி வரி 20 சதவிகிதம் குறைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலும் டெஸ்லா கார்கள் விரைவில் விற்பனைக்கு வரவிருப்பதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா மும்பையில் தனது முதல் ஷோரூமை திறக்கவுள்ளனர்.
இதற்கென மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வணிக வளாகத்தின் தரை தளத்தில் 4000 சதுர அடி கொண்ட இடத்தை டெஸ்லா நிறுவனம் வாடகைக்கு பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஷோரூமுக்கு மாத வாடகையாக ஒரு சுமார் ரூ. 35 லட்சம் கொடுக்கவுள்ளனர். இதற்கான ஒப்பந்தம் 5 வருடங்களுக்கு போடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தில்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் தனது 2-வது ஷோரூமை திறக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் மலிவு விலை கார்களே 35,000 டாலர் (ரூ. 30.3 லட்சம்). அதுமட்டுமின்றி சாலை வரி, காப்பீடெல்லாம் சேர்த்து சுமார் ரூ. 35 முதல் 40 லட்சம் வரை செலவாகும். ஆனால், இந்தியாவில் டெஸ்லா கார்களின் தொடக்க விலை ரூ. 21 லட்சம் ஆக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் விற்பனைத் தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.