ராகுலுடன் காங்கிரஸ் தொண்டர் ஹிமானி நர்வால்,
ராகுலுடன் காங்கிரஸ் தொண்டர் ஹிமானி நர்வால்,

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!
Published on

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்றும், ஜஜ்ஜார் மாவட்டத்தில் மொபைல் கடை நடத்தி வந்தவர் என்றும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஹிமானி நர்வால் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சச்சினை திங்கள்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போதுதான், அவர் மொபைல் சார்ஜர் மூலம் ஹிமானியைக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.

சச்சினும், ஹிமானியும் சமூக ஊடகம் மூலம் நட்பாகி பழகி வந்ததும், அவ்வப்போது ஹிமானி வீட்டுக்கு அவர் வந்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஜய் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஹிமானி தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், பிப். 27 அன்று அவரது வீட்டுக்கு சச்சின் வந்துள்ளார். இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. மொபைல் சார்ஜரைக் கொண்டு சச்சின், ஹிமானி கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.

பிறகு, அவரது நகை, செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை அங்கிருந்த சூட்கேசில், ஹிமானி உடலுடன் வைத்து தனது கடைக்குக் கொண்டு வந்துள்ளார். அங்கே நகை, செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை வைத்துவிட்டு, சூட்கேசுடன் சம்ப்லா பேருந்து நிலையம் வந்து அதனை வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்.

குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டிருப்பதையும், இருவருக்குள்ளும் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதையும் காவல்துறையினர் உறுதி செய்திருக்கிறார்கள். கைதான சச்சின் கையில் கடித்த அடையாளமும் காயங்களும் இருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com