
குஜராத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலை மையப்படுத்தி ராகுல் காந்தி அகமதாபாத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
2027 ஆம் ஆண்டு குஜராத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை மையப்படுத்தி காங்கிரஸ் எம்பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அகமதாபாத்தில் உள்ள கட்சித் தலைவர்கள், தொண்டர்களை வெள்ளிக்கிழமை சந்தித்து உரையாடவிருக்கிறார்.
கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை காலை முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பார். மாலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் காங்கிரஸின் மாவட்ட மற்றும் நகரத் தலைவர்களைச் சந்திப்பார்.
மாலை 5 மணி முதல் 7 மணி வரை உள்ளாட்சித் தலைவர்களுடன் அவர் உரையாடுவார் என்றும், சனிக்கிழமையன்று தொண்டர்களிடேயே உரையாற்றும் ராகுல் காந்தி அன்றிரவு தில்லிக்குச் செல்வார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கடந்த செவ்வாய்க்கிழமை குஜராத்திற்கு வந்தார்.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டபேரவைத் தேர்தலில், மாநிலத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில் காங்கிரஸ் 17 இடங்களை வென்றது. ஆனால், ஐந்து எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்த பிறகு, அவையில் கட்சியின் பலம் 12 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.