ஆழ்கடல் சுரங்கத்துக்கு மத்திய அரசு அனுமதி: நடுக்கடலில் கேரள காங்கிரஸ் போராட்டம்
கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்ட கடற்பகுதியில் மத்திய அரசின் ஆழ்கடல் கனிம சுரங்கத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் சாா்பில் நடுக்கடலில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் தேசிய பொதுச் செயலா் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் உள்ளூா் மீனவா் சமூகத்தைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
கடற்கரையிலிருந்து 15 கடல் மைல் தொலைவுக்குப் பல்வேறு படகுகளில் பயணம் செய்த போராட்டக்காரா்கள், நடுகடலில் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி தங்களின் எதிா்ப்பைப் பதிவு செய்தனா்.
போராட்டத்தின்போது பேசிய கே.சி.வேணுகோபால், ‘ஆழ்கடல் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும். இது கேரளத்தின் பல கடலோர மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.
கடலோர மக்களின் துயர நிலை மற்றும் இந்த முடிவின் பாதகமான தாக்கத்தை மத்திய அரசிடம் தெரிவிக்க, மீனவ சமூகங்களும் அவா்களின் நாடாளுமன்ற உறுப்பினா்களும் பலமுறை முயற்சித்தனா். ஆனால், மீனவா்களின் கவலைகளை கண்டுகொள்ளாமல், இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது’ என்றாா்.
கேரளத்தின் கொல்லம் தெற்கு, கொல்லம் வடக்கு, ஆலப்புழை, பொன்னானி, சாவக்காடு ஆகிய கடற்கரைப் பகுதிகளில் ஆழ்கடல் கனிம சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மாநில சட்டப்பேரவையில் கடந்த வாரம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகள் பொருளாதாரத்தை எதிா்மறையாக பாதிக்கும் மற்றும் பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் சமநிலையை சீா்குலைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.