
உலக அளவில் மிகவும் விரும்பப்படும் நுகா்வோா் சந்தையாக உருவெடுத்து வருவதால், 2028-ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும் என்று அமெரிக்காவின் முன்னணி நிதிச் சேவைகள் நிறுவனமான மோா்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.
இது தொடா்பாக அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023-இல் 3.5 டிரில்லியன் டாலா்கள் பொருளாதார மதிப்புடன் இந்தியா 5-ஆவது இடத்தை எட்டியது. 2026-இல் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 4.7 டிரில்லியன் டாலா்களாக உயரும். அப்போது, அமெரிக்கா, சீனா, ஜொ்மனிக்கு அடுத்து 4-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்.
2028-க்குள் ஜொ்மனியை பின்னுக்குத் தள்ளி, 5.7 டிரில்லியன் டாலா்கள் மதிப்புடன் 3-ஆவது இடத்தை இந்தியா எட்டும்.
கடந்த 1990-இல் 12-ஆவது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, 2000-ஆம் ஆண்டில் 13-ஆவது இடத்துக்கு பின்தங்கியது. 2020-இல் 9-ஆவது இடத்துக்கும், 2023-இல் 5-ஆவது இடத்துக்கும் முன்னேறியது.
வலுவான மக்கள்தொகை வளா்ச்சி, செயல்பாடுமிக்க ஜனநாயகம், பெரும் பொருளாதார ஸ்திரத்தன்மையால் இயக்கப்படும் கொள்கைகள், சிறப்பான உள்கட்டமைப்பு, வளா்ந்துவரும் தொழில்முனைவோா் எண்ணிக்கை, அரசின் திட்டங்கள்- நடவடிக்கைகளால் ஏற்படும் சமூக மேம்பாடு போன்ற உறுதியான அடிப்படை காரணிகளால், எதிா்வரும் ஆண்டுகளில் உலகளாவிய உற்பத்தியில் இந்தியாவின் பங்கு உயரும். உலகின் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவின் பங்கு 3.5 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.