பணத்தைத் திருப்பிக்கொடு! மோசடியாளரையே ஏமாற்றிக் கதறவிட்ட இளைஞர்!!

பணத்தைத் திருப்பிக்கொடு.. மோசடியாளரையே ஏமாற்றிக் கதறவிட்ட இளைஞர்!!
ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடிCenter-Center-Delhi
Published on
Updated on
1 min read

சிபிஐ அதிகாரி என்று கூறி ஆன்லைன் மோசடியில் ஈடுபட முயன்ற நபரையே ஏமாற்றி, ரூ.10,000 பறித்த கான்பூர் இளைஞர் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கான்பூரைச் சேர்ந்த பூபேந்திர சிங் என்ற இளைஞருக்கு, சிபிஐ அதிகாரி என்று கூறி மோசடியாளர் ஒருவர் பேசியிருக்கிறார். அவர், பூபேந்திர சிங்கிடம் உனது மோசமான விடியோக்கள் என்னிடம் உள்ளது. அபராதம் செலுத்தாவிட்டால், அதனை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.

இதனைக் கேட்டதுமே பூபேந்திராவுக்கு இவர்கள் மோசடியாளர்கள் என்று புரிந்துவிட்டது. இதனால் சற்று சுதாரித்துக் கொண்ட இளைஞர், அவ்வாறு வெளியிட்டுவிட வேண்டாம் என்று மோசடியாளரிடம் கெஞ்சியிருக்கிறார். அதுவும் எனது தாய்க்குத் தெரிந்துவிட்டால் அவ்வளவுதான் என்றும் கெஞ்சியிருக்கிறார்.

இதற்கு, இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்றால் ரூ.16,000 லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்று மோசடியாளர் கூற, அதற்கு பூபேந்திரா, தனது தாயின் தங்கச் சங்கிலி அடகில் இருப்பதால், வெறும் 3,000 ரூபாய் கொடுத்தால் அதனை மூட்டி மீண்டும் அடகு வைத்து நீங்கள் கேட்கும் தொகையை கொடுத்து விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

மோசடியாளரும் பூபேந்திராவின் நடிப்புத் திறமையை பார்த்து ஏமாந்து, இவர் ஒரு பெரிய ஏமாளி என நனைத்து உடனடியாக ரூ.3000 அனுப்பியிருக்கிறார்.

இந்த நாடகம் இதோடு முடியவில்லை. சற்று நேரத்தில் மீண்டும் மோசடியாளரை அழைத்த பூபேந்திரா, நாங்கள் வைத்தது ரூ.3,000 தான். ஆனால், அதற்கு வட்டியாக ரூ.4,800 கட்டச் சொல்கிறார்கள். அந்த தங்கக் சங்கிலிக்கு ரு.1 லட்சம் வரை கொடுப்பார்கள். எனவே, நீங்கள் 4,800 ரூபாய் அனுப்பினால் அதையும் சேர்த்து தனியாக திருப்பிக் கொடுத்து விடுவதாக இளைஞர் கூறியிருக்கிறார்.

இதை நம்பிய மோசடியாளர், அந்தப் பணத்தையும் அனுப்பியிருக்கிறார். இப்படியே மோசடியாளரை கதை கதையாகச் சொல்லி ரூ.10,000 வரை ஏமாற்றியிருக்கிறார் பூபேந்திர சிங்.

இதன் பிறகுதான், ஏமாற்ற வந்த தான் ஏமாந்தது தெரிந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மோசடியாளர், பூபேந்திராவை போனில் அழைத்து பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் காவல்நிலையம் வந்து, மோசடியாளர் மீது புகார் அளித்து, அவரிடமிருந்து பெற்ற ரூ.10,000 பணத்தையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

மோசடியாளர்கள் ஒன்றும் மோசடி செய்வதில் பிஎச்டி பெறவில்லை. அவர்களும் நம்மைப்போல சராசரியானவர்கள்தான். மோசடியாளர்களிடம் ஏமாறாமல் தப்பிக்கத்தான் வேண்டும் என்று இல்லை. முடிந்தால் ஏமாற்றியும் பார்க்கலாம் என்று புதிய கதை சொல்லியிருக்கிறார் கான்பூர் இளைஞர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com