ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

புதுவையில் நாள்தோறும் 150 பேருக்கு இலவச உணவு அளிக்கும் இளைஞர்!

புதுவையில் நாள்தோறும் 150 பேருக்கு இலவச உணவளிக்கும் இளைஞர் பற்றி...

News image
இலவச உணவளிக்கும் அருண்- EPS
Updated On :9 மார்ச் 2026, 9:54 am

இணையதளச் செய்திப் பிரிவு

தேப்ஜானி தத்தா

புதுச்சேரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாள்தோறும் 150-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அருண் என்ற இளைஞர் இலவச உணவு அளித்து வருகிறார்.

புதுச்சேரியில் ஸ்ரீ சாய் வெஜிடேரியன் ஹெல்த் புட்ஸ் என்ற உணவகத்தை அருண் (38 வயது) நடத்தி வருகிறார். இவர் கடந்த 658 நாள்களாக தொடர்ச்சியாக தனது உணவகம் மூலம் சாலையோர மக்கள், தினக் கூலிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சாப்பிட வசதி இல்லாத அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்கி வருகிறார்.

நாள்தோறும் விடியற்காலை தனது பணியைத் தொடங்கும் அருண் மற்றும் அவரது உதவியாளர்கள், சாப்பாடு, சாம்பார், ரசம், கூட்டு, காரக் குழம்பு, பொறியல் என சத்தான உணவை 150-க்கும் மேற்பட்டோருக்கு தயாரித்து வழங்கி வருகிறார்கள். சில நாள்கள் காய்கறி பிரியாணியும் கொடுக்கிறார்கள். மேலும், வாரத்தில் இரண்டு முறை பிரியாணி, சிக்கன், முட்டை, மீன் போன்ற அசைவ உணவையும் வழங்கி வருகிறார்கள்.

இதுதொடர்பாக ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்திடம் பேசுகையில், “மக்களுக்கு என்ன உணவை தருகிறேனோ, அதைதான் நாங்கள் வீட்டிலும் சாப்பிடுகிறோம். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான உணவை வழங்குகிறோம். மீதமுள்ள உணவை கொடுக்கவில்லை, அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட உணவைதான் சாப்பிடுகிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இவர்கள் பாரதி பூங்காவுக்கு அருகில் நாள்தோறும் மதியம் குடிநீருடன் உணவு வழங்கி வருகிறார்கள். மேலும், நகரின் பல்வேறு இடங்களுக்கும் உணவின்றி தவிப்பவர்களை தேடிச் சென்று அளித்து வருகிறார்கள்.

அருண்

அருண்

இலவச உணவு வழங்குவது ஏன்?

உப்பளத்தில் ஐஸ் வியாபாரி ஆல்பர்ட் மற்றும் கட்டுமானத் தொழிலாளி தேவி ஆகியோருக்குப் பிறந்த அருணின் குழந்தைப் பருவமானது பசியும் அவமானமும் நிறைந்ததாக இருந்துள்ளது.

குழந்தை பருவம் குறித்து அருண் பேசியதாவது:

“என் தந்தை குடிபோதைக்கு அடிமையாக இருந்தார். தான் சம்பாதித்த பணத்தை மட்டுமின்றி, எனது அம்மா சம்பாதிக்கும் பணத்திலும் குடித்தார். நாங்கள் ஒருவேளை மட்டுமே சாப்பிட்ட நாள்கள் அதிகம். சில நாள்கள் தண்ணீர் மட்டுமே குடித்துவிட்டு உறங்கியுள்ளோம்.

திருமண மண்டபங்களில் நடைபெறும் விருந்துகளில் மீதமாகும் உணவுகளை சாப்பிடச் சென்றபோது விரட்டி அடிக்கப்பட்டேன். பள்ளி பருவத்தில் பாடப் புத்தகங்கள், ஆடைகளுக்காக தன்னார்வ அமைப்புகளை நாட வேண்டியிருந்தது. அப்படிதான் எங்கள் வாழ்க்கை இருந்தது.

8 ஆம் வகுப்பு படிக்கும்போது, குடும்பச் சுமையைக் குறைக்க விடுமுறை நாள்களில் சிறு வேலைகளைச் செய்யத் தொடங்கினேன். 14 வயதில் தந்தையை இழந்துவிட்டேன். குடும்பத்தைக் காப்பாற்றும் வேளையில் 10-வது வரை பள்ளிப் படிப்பையும் முடித்தேன். பள்ளிப் படிப்புக்குப் பிறகு, ஒரு கடையில் 5 ஆண்டுகள் உழைத்தேன். பின்னர் ஒரு பொம்மை கடை.

7 ஆண்டுகள் சேமிப்புக்குப் பிறகு துரித உணவுக் கடை (ஃபாஸ்ட் புட்) தொடங்கினேன். பின்னர், நிலையான வருமானம் வரத் தொடங்கியவுடன், தேடல் சேவகன் அறக்கட்டளையைத் தொடங்கினேன். பல்வேறு தரப்பினர் அவர்களின் பிறந்த நாள், ஆண்டு விழா, உறவினரின் நினைவு நாள் போன்றவைகளுக்கு நன்கொடை அளிக்க தொடங்கினர். இருப்பினும், பெரும்பாலான பணிகளுக்கு சொந்த பணத்தையே பயன்படுத்தினேன். ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை, காலணி இல்லாதவர்களுக்கு காலணி வழங்கும் பணிகளை மேற்கொண்டேன்.

நான் சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட தொகையை உண்டியலில் போடும் பழக்கம் எனக்கு உள்ளது. தேவை ஏற்படும் போதெல்லாம் அதனை பயன்படுத்துவேன்.

எனது மனைவி, இரண்டு குழந்தைகள், கடை உதவியாளர்கள் 4 பேர் மற்றும் நண்பர்கள் சமையல் செய்யும் பணியில் ஈடுபடுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், மது போதைக்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனையும் அருண் வழங்குகிறார். இவரின் ஆலோசனையால் 20 பேர் குடிப் பழக்கத்தை விட்டுள்ளனர்.

அருண்

அருண்

உதாரணமாக, தேனியைச் சேர்ந்த முடித் திருத்தும் தொழிலாளி ரத்தினம் (37) என்பவர் கடந்த 8 மாதங்களாக மன உளைச்சலால் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். இவருக்கு நாள்தோறும் உணவளித்த அருண் அறிவுரை வழங்கியுள்ளார். தொடர்ந்து, முடித் திருத்தும் கருவிகளை வாங்கிக் கொடுத்து ரத்தினத்தின் தொழிலுக்கு மீண்டும் உயிர்ப்பித்தார்.

இதுமட்டுமின்றி, உரிமை கோரப்படாத சடலங்களைப் பெற்று கண்ணியமான முறையில் பிரியாவிடை அளித்து வருகிறார் அருண். சடலங்களை எடுத்துச் செல்வதற்காக அருணுக்கு சொந்தமாக வாகனத்தை நகைச்சுவை நடிகர் பாலா வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு வீடு கட்டுவதே தனது நோக்கம் என்றும், தங்குவதற்கு நல்ல இடம் இருந்தால், வாழ்க்கைக்காக அவர்களால் சில வேலைகளை செய்ய முடியும் என்றும் அருண் தெரிவித்தார்.

மீதமான உணவைகூட சாப்பிட விடாமல் திருமண மண்டபங்களில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட ஒரு சிறுவன், இன்று நாள்தோறும் 150 பேர் பசியுடன் படுக்கைக்குச் செல்வதை தடுத்து, உணவளித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.